வியாழன், 21 ஜூலை, 2022

சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை


hindutamil.in  : சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஜூலை 27-ல் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இம்மாதம் 27-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் 2 ஆலோசகர்கள் இம்மாதம் 27-ம் தேதி கள்ளக்குறிச்சி வருகின்றனர். இவர்களுடன் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
இதுதொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வரும் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.


அதில், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பள்ளியில் மைனர் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்யப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், விசாரணை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் அனைவரும் இந்த வருகையின்போது இருக்க வேண்டும்.

மாணவி படித்த பள்ளியின் விடுதியில் ஆய்வு செய்யப்படும்.இதையடுத்து உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்திக்க இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணைக்குத் தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக