வெள்ளி, 22 ஜூலை, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

tamil.asianetnews.com - .Thanalakshmi V  : கள்ளக்குறிச்சியின் கலவரத்திற்கு உள்ளான தனியார் பள்ளியின் விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியதாக மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்படாத விடுதியில் 24 மாணவர்களை தங்க வைத்துள்ளனர் என்று இதுக்குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.
அமைதியான முறையின் நடைபெற்ற போராட்டம்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்த கும்பல்,  20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.
கள்ளக்குறிச்சி கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்றே பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி திங்கள்கிழமை விசாரணையை தொடங்கியது. மேலும் மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே வெளியான மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன்பாக அவரது உடலில் புதிதாக காயங்கள் இருந்ததாகவும் அவரது உள்ளாடைகளில் இரத்தக்கறை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. மாடியிலிருந்து குதித்தது உண்மையா..? சிபிசிஜடி கையில் எடுத்த ஆயுதம்..

மாணவியின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட தடயவியல் மற்றும் விசாரணைக்குழு பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டி வருகின்றனர்.மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை காவல்துறை வெளியிட்டது. மேலும் கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுப்பட்டதாக இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே உளவுத்துறை ஐஜி யாக இருந்த ஆசியம்மாள அதிரடி மாற்றப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் மாநில குழந்தை நல பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியுள்ளதாக கூறினார். மேலும் முறையாக அனுமதி பெறாமல் 24 பள்ளி மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுக்குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாகவும் அனுமதி பெறாமல் மாணவர் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி 12ம் வகுப்பு மாணவி மரணம் குறித்து  விரிவான விசாரணை நடத்தப்படும். விடுதிக்கு உரிமம் இல்லை, விடுதிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. 24 சிறுமிகள் மற்றும் 83 சிறுவர்கள் அங்கு அடைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்தின் உறுப்பினர்  சரண்யா ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாணவி இறப்பு  விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளின் உடலை வாங்க மறுத்து, அவரது பெற்றோர் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக தங்கள் தரப்பு மருத்துவரை, மறு உடற்கூராய்வு போது அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த கோரிக்கையானாலும் அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக