வியாழன், 21 ஜூலை, 2022

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி : இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்:

 வீரகேசரி  : இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன?
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். பிபிசி சிங்கள சேவையும் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது.
கேள்வி: ரணில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: அவர் அதிக வாக்குகளைப் பெற்றார், அதனால் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.
கேள்வி: அவர் உங்களது நெடுங்கால அரசியல் எதிரியாக இருந்தவர். நீங்களும் அவருக்கு வாக்களித்தீர்களா?

பதில்: அப்படியும் சொல்ல முடியாது… (சிரிக்கிறார்)

கேள்வி: இப்போது அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: என்ன நடக்கப் போகிறதென்று நாங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும்.

கேள்வி: புதிய அரசாங்கத்தில் உங்கள் பங்களிப்பு இருக்குமா?

பதில்: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதைச் செய்வோம்.

கேள்வி: உங்கள் கட்சித் தலைவர் டளஸ் அழகபெருமவுக்கு ஆதரவளித்தார். ஏன் இந்த கருத்து வெறுபாடு?

பதில்: நாங்களும் அவருக்குத்தான் வாக்களித்தோம். ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார். யாராவது ஒருவர்தானே வெற்றிபெற முடியும்…

(பிபிசி கேள்வி): ரணில் மீது பல விமர்சனங்கள் உள்ளன — போராட்டக்காரர்கள் மற்றும் பிறரிடமிருந்து. மக்களின் உண்மையான குரல் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து?

பதில்: பல்வேறு கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அவர்கள் (போராட்டக்காரர்கள்) அவர்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறார்கள். நாங்கள் எங்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறோம்.

கேள்வி: மக்களின் போராட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: போரட்டம் போதுமென்று நினைக்கிறேன். போராட்டத்தை அவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக