செவ்வாய், 26 ஜூலை, 2022

அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்க முடிவு . மகிந்த உட்பட அனைவர்க்கும் அழைப்பு

ஐ பி சி : புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட திரு ரணில் விக்ரமசிங்க, பதவி ஏற்றபின் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விட்டுத்தார். .
நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.
அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது.

நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும். நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டு அனுப்பி வைத்திருந்தார்.

அதனையடுத்து ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக கடமையாற்றி வந்தார். இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் புதிய அதிபர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இன்றைய வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப்பெற்று ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசியல் வரலாற்றில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் அதிபராகி, தற்போது இடைக்கால அதிபராக ரணில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக