ஞாயிறு, 24 ஜூலை, 2022

குரங்கு அம்மை நோய் வேகமாக பரவுகிறது! உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

zeenews.india.com  : கொரோனாவை தொடர்ந்து,  குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. முதலில் கேரளாவில் நுழைந்த குரங்கு அம்மை, இப்போது தலைநகர் தில்லியையும் எட்டி விட்டது.  உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  குரங்கு அம்மை நோய்ப் பரவலை "உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தார். இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒருவகையான அம்மை நோய். இது வைரஸ் தொற்றில் இருந்து பரவுகிறது. சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் இருந்து பரவும் இந்த அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவத் தொடங்கியது. பின்னர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் துவங்கியது.

உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், தொண்டை புண், இருமல், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, உடல் சோர்வு, கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், வலிப்பு, இடுப்பு வலி உள்ளிட்டவை குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

குரங்கு அம்மை நோய், ஆறு முதல் 13 நாட்களில் தீவிரமடையலாம் எனவும்,  இந்த நோய் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். . குரங்கு அம்மை நோய் அனைத்து வயதினரையும் தாக்கும்  என்றாலும்,  ஊட்டசத்து குறைபாடு, இணைநோய் பாதிப்பு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை வைத்து கொள்ளும் நபர்கள் ஆகியோர் எளிதில் நோய் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. குரங்கு மட்டுமல்லாது வளர்ப்பு பிராணிகள் உள்பட அனைத்து விலங்குகளிடமிருந்தும், விலகி இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக பாராமரித்து, மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது, குரங்கு அம்மை நோயிலிருந்து உங்களைக் காக்கும் என ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக