சனி, 30 ஜூலை, 2022

என்ட பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே! மத்திய அரசை மலையாளத்தில் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்

Nantha Kumar R  -   Oneindia Tamil :  சென்னை: ‛என்ட பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புக்கும் வணக்கம்' எனக்கூறி ஜிஎஸ்டி முதல் நீட் வரை மலையாளத்தில் மத்திய அரசை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமா சார்பில் நடைபெற்ற 'இந்தியா - 75' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
கேரளாவில் மலையாள மொழி பேசும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு புரியும் வகையில் முதல்வர் ஸ்டாலின் மலையாள மொழியில் உரையாற்றி அசத்தினார். இந்த உரையில் ஒரே நாடு ஒரே மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஒட்டுமொத்த மாநிலங்கள் இணைந்தது தான் இந்தியாவாக உள்ளது. இதனால் ஒரு மொழி, ஒரு மதம் என்பதை கட்டாயமாக்க முடியாது என ஸ்டாலின் பேசினார். இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள் வருமாறு:மலையாள மனோரமாவின் இந்தியா 75 என்ன ‛இ பரிபாணியில்'பங்கெடுத்தது உங்களை சந்திப்பதில் சந்தோஷம் உண்டு. திருச்சூர் வர நினைத்த வேளையில் 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா வந்ததால் அங்கு வர முடியவில்லை. ஏப்ரல் மாதத்தில் சிபிஐஎம் மாநாட்டில் பங்கெடுக்க ‛யான்' கேரளா வந்திருந்தேன். ‛ஆ டைமில் கேரள சர்க்காரு, ஜனரு எனக்கு தந்த ஸ்பீகரனம் இன்னும் மறக்காவுதில்லா'(அந்த வேளையில் கேரளா அரசு மற்றும் கேரளா மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை என்னால் மறக்க முடியவில்லை)

இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்தியாவை 'ஏகஷிலா சம்ஸ்காரமாயி' மாற்றுவது நமக்கு ஒரிக்கலும் அங்கீகரிக்கான் ஆவில்லா.. இதினே நம்மள் ஒருமிச்சி, சக்தமாயி எதிர்க்கணும்'(ஒற்றை தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. இதனை ஒன்றிணைந்து நாம் எதிர்க்க வேண்டும்) என முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் பேசினார்.

வலிமையான, அதிகாரத்துடன் தன்னிறைவாக மாநிலங்கள் இருப்பது என்பது இந்தியாவுக்கு வலிமை தானே தவிர குறைவு ஏற்படாது. இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான். மக்களின் அனைத்து அன்றாட தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. எனவே மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநில அரசுகள் தன்னாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும்.

பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில் பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் உள்பட 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை என ஸ்டாலின் கூறினார். அதன்பிறகு ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசினார். அதில், சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுக்கும் கொள்கையாக உள்ளது என குற்றம்சாட்டினார்.
இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி
இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி

மேலும் மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும், இந்திய மக்களின் சகோதர உணர்வும் -இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் கூறியிருந்தார். மேலும் பேச்சின் முடிவில் ‛என்ட பிரியப்பட்ட மலையாள உடன் பிறப்புகளுக்கும் நன்றி வணக்கம்' என ஸ்டாலின் தனது பேச்சை முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக