மின்னம்பலம் : நித்யானந்தா தற்போது உடல் நிலை சரியில்லாமல் கைலாசாவில் ஜீவ சமாதி ஆகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் சில வாரங்களாகவே உலவிக் கொண்டிருக்கையில்.... அவரது பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் குருகுலத்தில் படித்துவரும், ஒரு சிறுவனை நித்யானந்தாவின் சீடர்கள் சரமாரியாக தாக்கியே கொல்ல முயலும் ஓர் ஆடியோ இன்று (ஜூலை 6) வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடதியில் உள்ள நித்யானந்தாவின் குருகுலத்தில் படிக்கும் சிறுவன் அஸ்வத். மா அவிமுக்தா மற்றும் ஸ்ரீ அவிமுக்தா ஆகிய இரு நித்தி சீடர்களின் மகன் தான் இந்த அஸ்வத். பால சாந்த் எனப்படும் குழந்தையிலேயே துறவு அருளப்பட்ட இந்த சிறுவனுக்கு பிடதி ஆசிரமத்தில் கடுமையான வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதைச் செய்ய முடியாத அந்த சிறுவன் அஸ்வத், ஒரு கட்டத்தில் பாத் ரூமுக்குள் போய் ஒளிந்துகொள்கிறான். பிறகு ஆசிரமத்தில் இருந்தே தப்பித்துப் போக முயற்சித்துள்ளான்.
இந்த கதறல் காட்சிகள் அப்படியே ஆடியோவாக பிடதி ஆசிரமத்தில் இருந்து லீக் ஆகியிருக்கின்றன. கேட்பவர்களை அப்படியே பதறச் செய்கிறது அந்த ஆடியோ.
ஆசிரமத்தில் இருந்து தப்பித்து வெளியே செல்ல முயன்ற அந்த சிறுவனை ஆசிரம நிர்வாகி தாக்குகிறார். பேசிக் கொண்டே தாக்குகிறார்.
“உங்க அப்பா அம்மாவ பாத்தியா இல்லியடா... ஓடிப் போக எப்படிடா தாட் வந்துச்சு? அவங்களோட பையனாடா நீ? ஓடிப் போவியாடா நீ? எதுக்கு ஓடுவே... இதை உன்னால சிம்பிளா செய்ய முடியாது? இது உன்னால செய்ய முடியுற விஷயம்தானடா...?” என ஒவ்வொரு கேள்வியின் போதும் தாக்கப்படுகிறான் அந்த சிறுவன். அப்போது, ‘சாமீ வேண்டா சாமீ...’ என்று கதறுகிறான், ஓலமிடுகிறான்.
“சாய் கிருஷ்ணா.,..சாய் கிருஷ்ணானு சொல்லிக்கிட்டே இருக்கியே...அவன் என்ன உன் குருவா? எழுந்திருடா....உனக்கு ஏண்டா ஓடிப் போகணும்னு தோணுச்சு” என கத்திக் கொண்டே மீண்டும் அடிக்கிறார் அந்த நிர்வாகி.
அந்த சிறுவன் அழுதுகொண்டே கெஞ்ச, “ அப்புறம் எதுக்கு பாத்ரூம்ல ஒளிஞ்சே.... உன்னால முடியுற வேலைதானடா இது...” என்று கேட்டு அடிக்கிறார்.
“ஐயோ பண்ண முடியும் சாமி.... பண்ண முடியும் சாமீ....” என்று கதறுகிறது அந்த பிஞ்சுக் குரல்.
இரும்பும் கம்பிகளாலும் மூங்கில் கம்புகளாலும் அஸ்வத் தாக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. தாக்கிக் கொண்டே மிரட்டும் அந்த குரல் நித்யானந்தாவின் சீடரான பிராணானந்தாவின் குரல் என்கிறார்கள் பிடதி வட்டாரங்கள்.
இந்தத் தாக்குதலின் காரணமாக அஸ்வத்தால் சில நாட்களாக நடக்கவோ, கைகளை சாப்பிடவோ முடியவில்லை என்றும் தெரியவருகிறது.
நித்யானந்தா ஆசிரமத்தின் சர்ச்சைகள் ஓயாது போலிருக்கிறது.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக