Ashroff Ali-அஷ்ரப் அலீ : பன்னிரண்டு வருட போராட்டம் வெற்றி
2004ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆனவுடன் அவரின் மொழிபெயர்ப்புப் பணிகளில் இணைக்கப்பட்டேன்
அதன் பின் 2005 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் தமிழ் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டேன். என் இனிய நண்பர்களான மறைந்த மங்கள சமரவீர, ஶ்ரீபதி சூரியாரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மற்றும் டலஸ், பசில் ஆகியோருடன் நானும் சமமாக உட்கார்ந்து தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிட்ட காலம் அது.
2005 தொடக்கம் 2010 வரை பல்வேறு அதிகாரங்கள். ஒரு கட்டத்தில் காணாமல் போனோர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இணைச் செயலாளர் வரை அதிகாரம் நாளுக்கு நாள் கூடியது. நில்பலகாய, தாருண்யட்ட ஹெடக் என்று எல்லாவற்றிலும் முக்கிய இடம்.
2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளின் பொறுப்பாளர்
2010 ஜனாதிபதித் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுத் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்.
பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் தான் ராஜபக்ஷ கும்பல் இனவாதப் பாதையில் நீண்ட தூரம் பயணிக்கத் தொடங்கியிருக்கும் சங்கதி வௌியே வரத் தொடங்கியது.
வன்னிப் படுகொலைகளில் அநியாயமாக கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை குறித்த யுனிசெப் கலந்துரையாடல் ஒன்றில் உண்மையைச் சொன்னதற்காக மஹிந்த அரைமணிநேரம் திட்டினார். அப்போதுதான் இவர்களுடன் இனியும் இணைந்திருப்பது தவறு என்று புரிந்தது
கடந்த 2010 ஜூலை 12ம் திகதி ...
ஜனாதிபதி செயலகத்தின் மிகவும் அதிகாரம் கொண்ட பத்து நபர்களில் ஒருவராக இருந்த நான் என் பதவி ராஜினாமாக் கடிதம் சமர்ப்பித்த நாள்..ஆனால் அதற்குப் பதில் எனக்கு தரப்பட்ட கடிதம் வேறு...
அதன் நாடு நாடாக அலைந்தேன்..
2015ல் மைத்திரி எனும் கிறுக்கன் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கெஞ்சியதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்தேன். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகளின் தமிழ்ப் பிரிவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். (2005 மஹிந்தவின் முதலாவது தேர்தல் தான் எனக்கும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் அனுபவம். அந்த வகையில் இது மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் அனுபவம்)
2015ல் இறக்க வேண்டிய அவ்வளவு துரும்புகள், சில கட்டங்களில் போலிப் பரப்புரைகள், எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் என்று ஒன்றரை மாத கடின உழைப்பில் நானும் மற்றவர்களுமாக உயிர் அச்சுறுத்தல்களுடன் பணியாற்றி மைத்திரிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தோம்
வென்றது தொடக்கம் ராஜபக்ஷ கும்பலின் பழைய நட்பை மைத்திரி புதுப்பித்தான். அவர்களின் ஊழல்கள் தொடர்பான வழக்குகளில் இருந்தும் தப்ப வைக்க அவனும் விஜயதாசவும் டீல் பேசி அவர்களைத் தப்ப வைத்தார்கள்.
ராஜபக்ஷ கும்பல் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் அபாயம் உணர்ந்து மைத்திரிக்கு எதிராகத் திரும்பி நின்றேன். என் வீட்டுக்கு தந்த பொலிஸ் பாதுகாப்பை மைத்திரி விலக்கினான்
அதன் பின் 2019ல் ராஜபக்ஷ கும்பலின் தேர்தல் அலுவலக பிரதானியாக செயற்பட மீண்டும் அழைப்பு. மறுத்தேன். அலி சப்ரியின் கீழான பிரச்சார அலுவலகத்தின் அழைப்பை மதித்து அங்கே சென்று கோட்டா எப்படிப்பட்ட முட்டாள் என்றும் இனவாதி என்றும் அவன் வந்தால் நாடு நாசமாகிப் போகும் என்றும் அத்தனை பேர் முன்னாலும் தைரியமாக கூறிவிட்டு அமர முயன்றால் , என்னை அடிக்க பலர் முயற்சி. மறைந்த என் அரசியல் குரு அலவி மௌலானாவின் புதல்வர் நகீப் மௌலானா தலையிட்டு என்னைக் காப்பாற்றினார். (நண்பர் முஸ்தீன் மற்றும் அலிசப்ரியின் அமைச்சில் பணியாற்றிய சம்மாந்துறை ராஜித் முஹைதீன் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதற்கு சாட்சி)
சஜித் இன் தேர்தல் வேலைகள் தொடர்பான பிரச்சாரத்துக்கு சென்ற போது சிறுபிள்ளைத்தனங்களை கண்டேன். ராஜபக்ஷ கும்பல் தான் வெல்லும் என்று புரிந்து போனது. வேறு வழியின்றி முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சிற்சில தமிழ் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கு கொண்டேன்.
ஆனாலும் எதிர்பார்த்தது போன்றே ராஜபக்ஷ கும்பல் மாபெரும் வெற்றி பெற்றது
ராஜபக்ஷ கும்பலின் அசுர வெற்றியில் நாடே திளைத்திருக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இந்தியாவும் கோட்டாவும் தான் என்று 2020 பெப்ரவரி தொடக்கம் எழுதினேன். அந்தக் காலத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சஹ்ரான் மட்டுமே சொந்த முயற்சியில் அதை செய்ததாக நம்பிக் கொண்டிருந்த காலகட்டம். ஆனால் நான் முன்வைத்த சந்தேகங்கள் குறித்து ஹரீன், ஹர்ச, ராஜித்த ஆகியோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் தான் சிங்கள ஊடகவியலாளர்கள் அந்தத் தகவல்களைக் கொண்டு ஆராயத் தொடங்கினர். இன்றைக்கு உண்மை வௌிவந்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. அதற்கு பின்னால் இருந்த மாபெரும் சதிகாரன் அவமானப்பட்டு அலங்கோலப்பட்டு விட்டான். அத்துடன் ராஜபக்ஷ கும்பலின் அரசியலுக்கு இன்று சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது
அடுத்ததாக நாளை தொடக்கம் ராஜபக்ஷ கும்பலின் மீள் எழுச்சிக்கு எதிராகவும், சம்பிக ரணவக, சரத் பொன்சேகா இனவாதிகளின் தலையெடுப்புக்கு எதிராகவும் என் போராட்டம் ஏனையவர்களுடன் இணைந்து தொடரும்.
ராஜபக்ஷ கும்பலின் ஆட்சி அதிகாரத்தை ஒழிக்கும் 12 வருடப் போராட்டத்தின் வழிப்பாதையில் என் ஆருயிராக நேசித்த என் முன்னாள் மனைவி, பிள்ளைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக பிரிந்து அநாதை போல யாருமற்றவனாகிப் போனேன். ஆனால் அந்த வேதனை எல்லாம் தாண்டி இன்று உலகத்தையே வென்று குதூகலத்தில் மிதந்து கொண்டிருக்கின்றேன். இழப்புகள் குறித்த கவலை பெரிதாக இருந்தாலும் இலக்கில் வெற்றி பெற்று விட்டோம். அல்ஹம்துலில்லாஹ்..
சுவீட் எடு... கொண்டாடு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக