கலைஞர் செய்திகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் இந்தப் பள்ளியைத் திறந்து வைத்திருக்கக்கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
'எண்ணும் எழுத்தும்' இயக்கம் என்கிற நிலையில் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எண்ணும் எழுத்தும்' திட்டத்தைத் தொடங்கி வைக்க, புழலுக்கு அருகே இருக்கக்கூடிய அழிஞ்சிவாக்கத்திற்கு நான் வந்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியை, பெருமையைத் தந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சொன்னது போல, சென்னையில் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாகத் திகழ்வது புழல் ஏரி என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிலும் குறிப்பாக, கொரோனா வந்த சமயத்தில், ஊரடங்கு பிறப்பித்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கும், எதிர்காலத்திற்கு ஏற்ற சிந்தனைத் திறனைக் கல்வியின்
மூலமாக அவர்கள் பெறுவதற்கும், பல்வேறு முன்னெடுப்புகளை நாம் தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் தான், அந்த அடிப்படையில் தான் எண்ணும் எழுத்தும் என்கிற இந்த இயக்கத்தைத் தொடங்கி வைப்பதற்காக இந்த அழிஞ்சிவாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன்.
'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' - என்றார் அவ்வையார் அவர்கள். அந்தத் தமிழ் மூதாட்டின் வழியில் எண்ணும் எழுத்தும்' இயக்கம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் ஓராண்டுகளாக, ஏன் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதனால் வகுப்பறையில் நேரடியாக கற்கும் வாய்ப்பை குழந்தைகள் பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கற்றலில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதனைக் குறைக்கவும், குழந்தைகளின் கற்றலை, அந்த ஆற்றலை அதிகப்படுத்தவும் எண்ணும் எழுத்தும்' என்ற இந்த முன்னோடித் திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான படிப்புகள் மட்டும் போதாது, புதிய உத்தி தேவை என்பதை அரசு உணர்ந்ததன் அடிப்படையில் தான், இந்தத் திட்டத்தை நாம் இன்றைக்கு வகுத்திருக்கோம். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒரு உயர்மட்டக் குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும், கல்வியாளர்களும் இருப்பார்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். இவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனைகளை நடத்தி இந்தத் திட்டத்தை சீர்செய்து, செழுமைப்படுத்துவார்கள். இது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் 92 ஆயிரத்து 386 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாக வைத்தே எண்ணும் எழுத்தும்' இயக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
"இளமையில் கல்" - என்றார் அவ்வையார் அவர்கள்.
'இளமையில் கற்காவிட்டால், முதுமையில் மண்' என்பார்கள். இளமைப் பருவத்தில் அவர்களுக்குள் புகுத்தப்படக்கூடிய அறிவு மிக எளிதாக நுழைந்து விடும். ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள் 90 விழுக்காடு அளவுக்கு அதன் மூளை வளர்ந்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.
3 முதல் 5 வயதுக்குள் அதனுடைய சிந்தனை ஆற்றல் பெருகிவிடுகிறது. இந்தச் சிந்தனை ஆற்றல்தான் அந்தக் குழந்தையின் ஆளுமைத் திறனை தீர்மானிக்கிறது. எனவே, இத்தகைய தொடக்கப்பருவத்தில் கல்வியைத் தர வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. அதனைத்தாண்டி அரசுக்கும் உண்டு.
அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் உயர்கல்வி என்பதே இந்தத் திராவிட மாடல் அரசினுடைய இலட்சியமாக, கடமையாக அமைந்திருக்கிறது.
அனைவர்க்கும் கல்வி என்ற நோக்கத்திற்காகத்தான் திராவிட இயக்கமே உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமான சமூகநீதி என்பதே கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான். நீதிக்கட்சி காலம் தொட்டு இன்றுவரை கல்விக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாக நம்முடைய திராவிட இயக்கம் செயல்பட்டு வருகிறது.
தொடக்கக் கல்வியை வெறும் கல்வியாக மட்டும் பார்க்க முடியாது. அது வாழ்க்கையின் வழிகாட்டியாக, தன்னம்பிக்கையின் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இந்தச் சமூகத்தின் திறவுகோலாக ஒவ்வொரு மனிதருக்கும் இருப்பது இந்தத் தொடக்கக் கல்வி!
ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி மட்டும் ஒழுங்காக, முறையாகக் கிடைத்துவிட்டால், அதன் பிறகு நடப்பது அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதனால்தான், 'திராவிட மாடல்' அரசு எண்ணும் எழுத்தும்' என்ற இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது,
2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்கு!
• 2025-ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எண்ணறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பது நம்முடைய இலக்கு!
• 2022-23-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய மூன்று வகுப்புகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்குப் பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
• தமிழ்வழி - ஆங்கிலவழி ஆகிய இரண்டு மொழி வழியாகவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பாடமாக மட்டுமல்லாமல், எளிமையான செயல்பாட்டு வடிவத்திலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படாத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
• இதற்காக எண்ணும் எழுத்தும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாடங்களை எப்படி கற்பிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
• ஒவ்வொரு பாடமும் நடத்துவதற்கு ஏற்றவாறு வகுப்பறைக் களம் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆடல் - பாடல் - கதையாகச் சொல்லுதல் - நடித்துக் காட்டுதல் - பொம்மலாட்டம் - கைவினைப் பொருள்கள் எனப் பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றன.
• இதற்கான காணொளிகளும் வழங்கப்பட உள்ளன.
- இப்படி பல்வேறு வகையில் இத்திட்டம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை வடிவமைத்திருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய அமைச்சர், அதேபோல் இந்தத் துறையினுடைய செயலர், ஆணையர், அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
இதன் மூலமாக தமிழகக் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை !
குழந்தைகள் கவனச் சிதறல் இல்லாமல் கல்வி கற்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளி குறைவது மட்டுமல்ல - மிகச்சிறந்த அளவில் அவர்கள் கற்றல் திறன் அதிகமாகும். கல்வி ஆர்வமும் அதிகமாகும். படைப்பாற்றல் அதிகமாகும். அறிவாற்றலும் அதிகமாகும். தன்னம்பிக்கையும் அதிகமாகும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அவர்களது பயணம் சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் வியத்தகு உலக சாதனை ஒன்றை செய்திருக்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக Reading, Marathon என்கிற தொடர் வாசிப்பு இயக்கம் ஜூன் 1 முதல் 12 வரை நடத்தப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் Read aloud செயலியை பயன்படுத்தி நமது அரசுப் பள்ளிக் குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் 200 கோடி சொற்களை வாசித்து இருக்கிறார்கள்.
14 இலட்சம் மாணவர்கள் பங்கு கொண்ட இந்த சாதனையில் 81.04 இலட்சம் கதைகள் 7.04 இலட்சம் மணி நேரத்தில் வாசிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே Read aloud செயலியில் இது வரையிலான பயன்பாடுகள் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தப்பட்டதே கிடையாது. இச்சாதனையை செய்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக உழைத்த தன்னார்வலர்களையும் நான் இந்த நேரத்தில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
2025-ஆம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டிய இலக்கை நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அமைச்சர் முதல் ஆசிரியர்கள் வரை நான் சொல்ல விரும்புவது - இந்தத் திட்டம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ - அதன் நோக்கம் சிதையாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. இவ்வளவு சிறப்பான திட்டமாகி அமைந்திருந்தாலும், அது தொடங்கப்படும்போது இருக்கும் ஆர்வமும் அக்கறையும் தொடர்ந்து இருந்தால் தான், இதில் இறுதிப் பயன் என்பதை நாம் முழுமையாகக் அடைய முடியும்.
எனவே தொடக்கவிழாவின்போது இருக்கும் அக்கறையும் ஆர்வமும் இறுதிவரை இருக்க வேண்டும். இன்று நடக்கும் தொடக்கவிழாவை விட, மூன்று ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் வெற்றிவிழாவையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன். பள்ளிக்கல்வித் துறையின் வெற்றி மட்டுமல்ல, இந்த அரசின் வெற்றியும் அதில் தான் அடங்கி இருக்கிறது. விலைமதிக்க முடியாதது எது என்று கேட்டால் அது கல்வி மட்டும்தான். அத்தகைய கல்வி ஆற்றலை நம்முடைய குழந்தைகளுக்குத் தருவதன் மூலமாக நாம் ஆற்றும் இந்தப் பணி என்பது விலைமதிக்க முடியாதது ஆகும்!
கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். அந்தச் சொத்தை உருவாக்கக்கூடிய திருமிகு திட்டம்தான் இந்த எண்ணும் எழுத்தும்'.
தமிழ்நாட்டுக் குழந்தைகள் கல்வியில், அறிவாற்றலில் மேன்மை அடைய எத்தனையோ நல்ல பல திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
• இல்லம் தேடிக் கல்வி • நான் முதல்வன்
இளந்தளிர் இலக்கியத் திட்டம் • வகுப்பறை உற்றுநோக்குச் செயலி • கல்வி தொலைக்காட்சி - ஆகியவற்றின் வரிசையில் இந்த எண்ணும் எழுத்தும் திட்டமும் இணைந்திருக்கிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடாக - உயர்கல்வியிலும் - ஆராய்ச்சிக் கல்வியிலும் - அறிவாற்றலிலும் - சிந்தனைத் திறத்திலும் உயர்ந்த தமிழ்நாடாக மாறுவதற்கான அனைத்துத் திட்டங்களையும் நாம் வகுத்துச் செயல்படுத்துவோம்.
கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் ! கல்வி மட்டும்தான் நமக்கு மதிப்பைத் தேடித் தரும்! கல்வியால் பெறக்கூடிய பெருமை மட்டும்தான் எதனாலும் அழிக்க முடியாதது! கல்வியுரிமை என்பது நாம் போராடிப் பெற்றது! எனவே, கல்வியின் மீதான ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்!
படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்! 'படிக்காமலே சாதிக்கலாம்' என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை!
இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையை கை காட்டும் சூழ்ச்சி அது!
எனவே, குழந்தைகள் - பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்பது படிப்பு - படிப்பு - படிப்பு மட்டும் தான்.
இதனை முதலமைச்சராக அல்ல - ஒரு தந்தையாக உங்களில் ஒருவனாக இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். "எண்ணும் எழுத்தும்" இந்த ஆட்சியின் கண்ணும் கருத்தும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக