வியாழன், 30 ஜூன், 2022

திமுகவிடம் உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

மின்னம்பலம் : தமிழ்நாடு அரசியலில் தற்போது பேசுபொருளாக இருப்பது அதிமுகவும் அதன் இரட்டை தலைமையான ஓ.பி.எஸ்.சும், மற்றும் ஈ.பி.எஸ்.சும் தான் . ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி அடியெடுத்து வைக்க, கடுமையாக எதிர்த்தார் ஓ.பி.எஸ்.
பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு பொதுச்செயலாளராக மாறலாம் என நினைத்தவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் செக் வைத்தார் ஓ.பி.எஸ்.
இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் சில தெரியாத விஷயங்களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
குறிப்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம் “ஓ.பி.எஸ். பின்னால் இருந்து திமுகதான் அவரை இயக்குகிறது” என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் திமுகவுக்கு இதனால் கிடைக்கும் லாபம் என்ன என்று பல்வேறு தரப்பிலும் இது பேசப்பட்டது.
ஆனால், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு சில நாள்கள் முன்பு, திமுகவிடம் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் அணி முதல்வர் ஸ்டாலினை அணுகியிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.



அதிமுக பொதுக்குழு நடக்கும் முன் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், லைகா சுபாஸ்கரன் மூலம் முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசனிடம் பேசி திமுகவின் உதவியை நாடியுள்ளனர். சபரீசனும் சுபாஸ்கரனும் நண்பர்களாக அறியப்படுபவர்கள்.

அதிமுக பொதுக்குழு நடந்தால் ஓபிஎஸ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு கட்சியில் ஓரங்கட்டப்பட வாய்ப்பிருப்பதால், ஆளும் திமுக தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் பொதுக்குழு அனுமதியை மறுத்து தற்போதைக்கு நடத்த விடாமல் செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ரவீந்திரநாத்தின் இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சபரீசன் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். ஆலோசனையில், ஓ.பி.எஸ்.சுக்கு தேவையானதை செய்யலாம் என சிலர் கூறிய நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் அதனை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

குறிப்பாக, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த போது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது இல்லை எனவும் கட்சியில் தன்னையே நிலைநிறுத்திக் கொள்ள முடியாத சூழலில் இருப்பவருக்கு உதவுவது திமுகவுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும் எனவும் துரைமுருகன் எச்சரித்திருக்கிறார்.

மேலும், “தமிழ்நாடு அரசியலில் திமுக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இங்கு அதிமுக இருப்பதும் முக்கியம். ஆனால் அக்கட்சி வலுவில்லாத எதிர்கட்சியாக இருக்க வேண்டும். ஒருவேளை நாம் ஓ.பி.எஸ்.க்கு உதவுவதன் மூலம் அதிமுக பிளவுபட்டு, பாஜகவோடு நேரடி அரசியல் செய்யும் நிலை வந்தால் அது திமுகவுக்கு தேவையில்லாத தலைவலி என கூறிய அவர், திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போதும் பலரும் பரபரப்பாக பேசினார்கள், ஆனால் அது திமுகவில் எத்தகையை தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் அப்படித்தான் செல்லும்” என கூறியுள்ளார் துரைமுருகன்.

“நானும் கூட ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும் என நினைத்தேன், ஆனால் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் மட்டுமே ஓபிஎஸ் உடன் இருக்கிறார்கள், நீங்கள் சொல்வது சரிதான்” என துரைமுருகனுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும்தான் ஓபிஎஸ்ஸை திமுகதான் இயக்குகிறது என கொந்தளித்திருக்கிறார் சி.வி சண்முகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக