வியாழன், 9 ஜூன், 2022

பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் தீர்ப்பும் பின்தொடரும் எச்சரிக்கையும்.

சிறப்புக் கட்டுரை: பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் தீர்ப்பும் பின்தொடரும் எச்சரிக்கையும்...
மின்னம்பலம் - அ.குமரேசன்  : “உலகத்தின் மிகப் பழைமையான தொழில் பாலியல் தொழில்” (தி ஒர்ல்ட்’ஸ் ஓல்டஸ்ட் புரொஃபஷன்) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.
மிகப் பழங்காலத்திலிருந்தே இத்தொழில் இருந்துவருவதை இது காட்டுகிறது. ஆனால் உலகம் முழுவதும் இது ஒரு முறையான வாழ்க்கைத் தொழிலாக (புரஃபஷன்) அங்கீகரிக்கப்பட்டதுமில்லை, மதிக்கப்பட்டதுமில்லை. ‘பிராஸ்டிடியூஸன்’ என்ற சொல்லுக்கு ‘விபச்சாரம்’ என்பதன்றி நேரடியான தமிழ்ச்சொல் இருப்பதாக என்னளவில் தெரியவில்லை,
இருந்தாலும் அது புழக்கத்தில் இல்லை. ஆனால் ‘பிராஸ்டிடியூட்’ என்ற சொல்லுக்குத் தமிழில் பரத்தை, வேசி, விலைமகள் என்றெல்லாம் சொற்கள் உள்ளன. கொச்சையான வசைச் சொல்லும் இருக்கிறது.
ஆண்களிலும் இத்தொழிலைச் செய்பவர்கள் உண்டு என்றாலும், இந்தச் சொற்கள் பெண்களை மட்டுமே அடையாளப்படுத்துகின்றன. ஆணாதிக்கச் சமுதாயத்தில் மொழியும் அதற்கேற்பக் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதில் ஈடுபடுகிற பெண்கள் சந்திக்கிற அவமானங்கள், சமூக ஒதுக்கல்கள், உடல் நோவுகள், பாதுகாப்பின்மைகள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். அதற்கொரு முக்கியக் காரணம் இது ஒரு முறையான தொழிலாக அங்கீகரிக்கப்படாததுதான் என்று இவர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் குரல்கொடுக்கும் அமைப்புகள் சொல்லிவந்துள்ளன.
 நெடிய இயக்கங்களின் பலனாக, விபச்சாரம் என்ற சொல் பாலியல் தொழில் என்றும், விபச்சாரி என்ற சொல் பாலியல் தொழிலாளி என்றும் குறிப்பிடப்படுவது ஓரளவுக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆயினும் முறையான வாழ்க்கைத் தொழிலாக ஏற்கப்படவில்லை.  இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மே 19 அன்று ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில் இதை ஒரு தொழிலாக அங்கீகரித்துள்ளது. வேறு எந்தத் தொழிலாளரையும் போலவே பாலியல் தொழிலாளர்களும் கண்ணியமாக நடத்தப்படுவதற்கும் அரசமைப்பு சாசன உரிமைகளுக்கும் உரியவர்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, அரசமைப்பு சாசனத்தின் 142ஆவது சட்ட உரையின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு ஆணையிட்டுள்ளது. “பாலியல் தொழிலாளிகள் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரியவர்கள். குற்றவியல் சட்டம் அனைத்து வழக்குகளிலும் வயது, ஒப்புதல் என்ற அடிப்படைகளில் சமமாகக் கையாளப்பட வேண்டும். பாலியல் தொழிலாளி வயதடைந்தவர்தான் என்பதாலும் ஒப்புதலோடு பங்கேற்கிறார் என்பதாலும் காவல்துறையினர் தலையிடுவதிலிருந்தும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 2011இல் சிறப்பு அதிகாரத்தின்படி அமைக்கப்பட்ட ஒரு குழுவின் 10 பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்பதில் உள்ள தயக்கம் காரணமாக ஒன்றிய அரசு இன்னமும் இதற்கான சட்டம் இயற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், சட்டம் இயற்றப்படும் வரையில் அந்தப் பரிந்துரைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று கூறியுள்ளது (டெக்கான் கிரானிகிள்).

“தானே முன்வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதச் செயலல்ல, பாலியல் தொழில் விடுதியை நடத்துவதுதான் சட்டவிரோதம். ஆகவே எந்தவொரு விடுதியில் சோதனை நடத்தும்போதும் பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்படவோ, தண்டிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது” என்றும் நீதிபதிகள் அமர்வு ஆணையிட்டுள்ளது (தி இந்து).

பேசுபொருளாக்கிய ஒரு திரைப்படம்

பாலியல் தொழில் ஒரு இழிசெயலாகவும், குற்றமாகவுமே பார்க்கப்பட்டு, சொல்லப்பட்டு வந்துள்ளது. ஆகவே இவர்களது பிரச்சினைகள் பற்றிப் பொதுவெளியில் மிகக் குறைவாகவே பேசப்பட்டு வந்துள்ளது. மனித உரிமை அமைப்புகளும் மாதர் இயக்கங்களும்தான் இது பற்றிப் பேசி வந்துள்ளன. அண்மையில் ‘கங்குபாய் கதியாவாடி’ என்ற பாலிவுட் திரைப்படம் இதை ஒரு பேசுபொருளாக்கியிருப்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் மைத்ரேயி கல்லூரி ஆசிரியர்கள் பிஜயானி மிஷ்ரா, சபிஹா மஜித், ‘ஏன் உச்ச நீதிமன்ற அங்கீகாரம் வரவேற்கத்தக்கது?’ என்ற தங்கள் கட்டுரையில் தெரிவிக்கிறார்கள் (இந்தியன் எக்ஸ்பிரஸ்).

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய அந்தப் படம், கங்குபாய் ஹர்ஜீவன்தாஸ் என்பவரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. குஜராத்தில் பிறந்தவரான அவர், தனது காதலனோடு மும்பைக்கு வந்து குடியேறியவர். அங்கே அவன் கங்குபாயை வஞ்சித்து, ஒரு பாலியல் விடுதிக்கு விற்றுவிட்டான். பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட அவர் பின்னர் பாலியல் தொழில் பெண்களுக்கென ஒரு இல்லம் அமைத்தார். அவர்களது சட்ட உரிமைகளுக்காகப் போராடினார். கமதிபுரா பகுதியின் ராணி என்று அழைக்கப்பட்ட கங்குபாய், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து பாலியல் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்புக்குக் கோரிக்கை விடுத்தார். நேரு அதனை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்தே இவர்களுக்கான அங்கீகாரத்துக்காகப் பல்வேறு இயக்கங்கள் நடந்து வருகின்றன.

தமிழிலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்’ படம் பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுக்க நேர்ந்த ஒரு பெண்ணின் கதையைச் சொன்னது. இத்தகைய பட முயற்சிகள் அவ்வப்போது மற்ற மொழிகளிலும் நடந்திருக்கின்றன. ஆயினும் ‘கங்குபாய் கதியாவாடி’ இவர்களது உரிமைகள் பற்றிப் பேசுகிற படம் எனலாம்.

இத்தகைய படங்களும் இலக்கியப் படைப்புகளும் ஒருபுறமிருக்க, அவற்றின் பாடங்களை எந்த அளவுக்குச் சமுதாயம் உள்வாங்கியிருக்கிறது? இதில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் தனது தொழில் இதுதான் என்று பொதுவெளியில் அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா? சமுதாயம் இதனை இழிசெயலாகப் பார்ப்பதால் ரகசியமாகவே இத்தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. அந்த ரகசியத்தன்மை காரணமாகவே மேலும் அவமதிப்பு, மேலும் புறக்கணிப்பு… இவர்கள் மட்டுமல்ல, இவர்களின் குழந்தைகளும்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு

இந்தச்சூழலில், ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிற காரணத்தாலேயே அவரது குழந்தை அவரிடமிருந்து பிரிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது முக்கியமானது. “மனித கவுரவத்துக்கும் கண்ணியத்துக்குமான அடிப்படைப் பாதுகாப்பு பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் விரிவடைகிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் பாலியல் விடுதியிலோ, பாலியல் தொழிலாளர்களுடனோ வாழ்கிற வயதடையாப் பருவத்தினரை (சிறார்) பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டவர்களாகக் கருதப்படக் கூடாது. அந்தச் சிறுவனோ, சிறுமியோ தன்னுடைய மகன் அல்லது மகள்தான் என்று பாலியல் தொழிலாளி கூறுவாரானால், அதன் உண்மைத் தன்மையை விசாரித்தறிய வேண்டும். உண்மைதான் என்று தெரியவருகிறபோது குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிரிக்கக் கூடாது என்று நீதிபதிகள் ஆணையிட்டிருப்பதைப் பாலியல் தொழிலாளர்களும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரும் வரவேற்பதில் வியப்பில்லை.

உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு ஆணையும் வரவேற்கத்தக்கது. பாலியல் தொழிலாளர்களின் புகார்களை, குறிப்பாகப் பாலியல் கொடுமைகள் தொடர்பான புகார்களை எடுத்துக்கொள்வதில் காவல்துறையினர் பாகுபாடு காட்டக் கூடாது என்கிறது அந்த ஆணை. இப்படிப்பட்ட புகாரோடு வரக்கூடிய ஒரு பாலியல் தொழிலாளி ஆகப் பெரும்பாலான காவல்நிலையங்களில் எவ்வாறு நடத்தப்படுவார் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியதே. “நீயே அப்படிப்பட்டவதானே…”, “என்ன நீ கேட்ட காசைக் கொடுக்க மாட்டேன்னுட்டானா…” என்ற இளக்காரப் பேச்சுகளோடு புகார் அப்போதே தள்ளுபடி செய்யப்படும். “பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை கொடூரமானதாகவும் வன்மமாகவும் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஏதோ அவர்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத ஒரு வர்க்கம் என்பது போல நடத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ள நீதிபதிகள், இது தொடர்பான புரிதல் காவல்துறையினருக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பாதிக்கப்படும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளும் சட்ட உதவிகளும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று பணித்துள்ளனர். பாலியல் தொழிலாளர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, அவர்களுடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆணுறை போன்றவற்றை குற்றத்துக்கான ஆதாரமாக காவல்துறையினர் தாக்கல் செய்வதுண்டு. இனி அவ்வாறு செய்யக் கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஊடகங்களின் பொறுப்பு

ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பைச் சொல்லவும் உச்ச நீதிமன்றம் தவறவில்லை. கைது, சோதனை, மீட்பு நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றம் சாட்டப்பட்டவர்களாகவோ பாலியல் தொழிலாளர்களை அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதில் ஊடகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு அடையாளம் காட்டக்கூடிய படங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகிகள் கைது என்றெல்லாம் புகைப்படத்துடன் செய்திகள் வந்திருப்பதன் பின்னணியில் இது முக்கியமானதொரு வழிகாட்டலேயாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய வழிகாட்டல்கள் சட்டமாகிறபோதுதான் உறுதிப்படும். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறபோது பாலியல் தொழிலாளர்களை அல்லது அவர்களது பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பொதுவாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல்தான் இங்கே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்ற நடைமுறை அனுபவத்தில், இந்த ஆணை எவ்வளவு சரியானது என விளக்க வேண்டியதில்லை.

உலகில் வேறு எங்காவது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், ஈக்வடார், ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ், இந்தோனேசியா, நெதர்லாந்து ஆகிய 15 நாடுகள் பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமானதாக்கி முன்னுதாரணம் படைத்துள்ளன. பாலியல் தொழிலாளர்களுக்கான மருத்துவ சேவைகளுக்கும் நிதியாதார உதவிகளுக்கும் இந்நாடுகளில் வழிசெய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இன்னும் சட்டம் ஆகவில்லையே என்று வாதிட்டுக் கொண்டிராமல் இந்த முன்னுதாரணங்களில் ஒன்றாக இந்தியாவும் இணைவதே மானுட நேயம்.

முற்றுப்புள்ளியும் தொடக்கப்புள்ளியும்...

முறையான தொழிலாக அங்கீகரிப்பதால், குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதில் பாலியல் தொழிலாளர்கள் நடத்த வேண்டியிருக்கிற போராட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிஜயானி, சபீஹா இருவரும் தங்களின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, பாலியல் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது இன்னும் கடினமான சவாலாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஆணை செயலுக்கு வருகிறபோது அந்தக் குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உரிமைகள் உறுதிப்படுவதற்குத் தொடக்கப்புள்ளி வைக்கப்படும்.

பாலியல் தொழிலுக்கான ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான 1956ஆம் ஆண்டின் சட்டம், ஒருவர் இத்தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல. ஆனால், இதைப் பயன்படுத்தி ஒருவர் பணம் ஈட்டுவது குற்றம் என்று கூறியுள்ளது. விடுதி நடத்துவது, ஆள் பிடித்து வருவது, வற்புறுத்தி ஈடுபடுத்துவது போன்றவை குற்றச்செயல்கள். நடைமுறையில் இந்தக் குற்றச் செயல்கள் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன? சொல்லப்போனால் இவ்வாறு பெண்களை வலுக்கட்டாயமாக இதில் ஈடுபடுத்துகிற கும்பல்கள் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள் என்பதே உண்மை.

அந்தச் சட்டம், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் பொது இடங்களில் இருந்து குறைந்தது 200 மீட்டர் தொலைவு இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏற்கெனவே சமூகத்தில் உள்ள பார்வையோடு சட்டத்தின் இந்த விதியும் சேரும்போது, ரகசியமாகவே இதில் ஈடுபட வேண்டியுள்ளது. இது அவர்களைப் பொதுச்சமூகத்திலிருந்தும், இயல்பான சமூகச் செயல்பாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்தியே வைத்திருக்கிறது. சட்டப்பூர்வமாக்குவது மட்டும் இவர்கள் சமுதாயத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதற்குப் போதுமானதல்ல என்கிறார்கள் பிஜயானி, சபீஹா.

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மிகப் பெரும்பாலோர் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள். இவர்களில் யாரும் இது ஒரு கௌரவமான வருமான வழி என்று தேர்ந்தெடுத்து வந்தவர்கள் அல்லர். மாறாக, வருமானத்துக்கு வேறு வழி இல்லாததால் வந்தவர்களே. உலகம் முழுவதுமே இதில் ஈடுபட்டிருப்பவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில், 85 சதவிகிதம் பேர் பணத்துக்காகவே இதைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்கான பணத்துக்காக இதைத் தேர்ந்தெடுத்தவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள், அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காக இதில் இறங்கியவர்களே மிக அதிகமாக இருப்பார்கள்.

அவர்கள் செய்வது இழிசெயல் என்ற எண்ணம் சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருப்பதால், அவர்களைக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்ப்பதற்கு மாறாக, குற்றங்களைச் செய்பவர்களாகவே சமூகம் பார்க்கிறது. காவல்துறை உள்ளிட்ட அதிகாரக் கட்டமைப்புகளிலும் அந்தப் பார்வை பிரதிபலிக்கிறது. அவர்கள் எதிர்கொள்கிற வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் பொருட்படுத்தப்படுவதில்லை. எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற கொடிய பாலியல் நோய்களால் தாக்கப்பட்டால்கூட உரிய சிகிச்சை கிடைப்பதில்லை.

எச்சரிக்கைக் குரல்

இப்படிப்பட்ட நிலைமையில்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலியல் தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியத் துணையாக வந்திருக்கிறது. ஆயினும் இது முதல்படிதான். முதலில் பார்த்தது போல வருவாய்க்கு வேறு வழி இல்லாத நிலையில்தான் இதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற நிலையில், அதற்குக் காரணமான வறுமைக்கு முடிவு கட்டாமல் முழுமையான மாற்றம் ஏற்பட்டுவிடாது. வறுமையும் பாலியல் போதாமையோடு சேர்ந்த வேட்கையும் தொடர்கிற வரையில் பாலியல் தொழிலும் தொடரவே செய்யும். வேட்கையைத் தணிக்கிற பணியைச் செய்கிறார்கள் என்பதால், பாலியல் குற்றங்கள் பெருகுவதைத் தடுக்கும் அணையாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்று சமூக அக்கறையாளர்கள் கூறுகிறார்கள்.

முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்தது வறுமை. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும் கூட்டுக்களவு முதலாளித்துவத்தையும் பேணி வளர்க்கும் அரசியல்-பொருளாதார அமைப்பில், மக்களுக்கான நலத்திட்டங்கள் பலவும் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. வறுமை எப்படி ஒழியும்?

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாக, ஒருபக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பாலியல் தொழிலாளர்களுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதை வரவேற்றுக்கொண்டே, பெண்களையும் சிறுமிகளையும் அடக்கி மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறவர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார்கள் என்ற எச்சரிக்கையும் ஒலிக்கிறது. சோதனை நடவடிக்கைகளின்போது இந்தப் பெண்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தில்தான் இதில் ஈடுபட்டிருப்பதாக வாக்குமூலம் அளிக்கக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். அவர்களும் வேறு வழியின்றி அவ்வாறே சொல்வார்கள். மேலும், இது ஒரு முறையான தொழில் என்றான பிறகு, அதில் முதலீடு செய்வதிலோ, இந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுவதிலோ என்ன தவறு இருக்கிறது என்ற வாதப் புகையும் கிளப்பிவிடப்படக் கூடும். இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட முடியாது.

வறுமையை முற்றாக ஒழிப்பதற்கான உண்மை அக்கறையுள்ள திட்டங்கள், பெண்களுக்கு உயர்கல்வி வரையில் கல்வி உரிமை, வேலை வாய்ப்புகள், நிதியாதாரங்கள் ஆகியவற்றை உருவாக்கி நிலைப்படுத்துவதோடு இணைந்ததே பாலியல் தொழிலாளர் விடுதலை. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, பாலியல் தொழில் பற்றிய சமுதாயத்தின் பார்வையை மாற்றுவதற்கான விழிப்புணர்வு இயக்கங்கள் விரிவாக முன்னெடுக்கப்படுவதோடு இது இணைய வேண்டும். பெண்களை இரண்டாம்நிலைக் குடிமக்களாகக் கருதுகிற, ஆணுக்குப் பணிவிடை செய்யவே படைக்கப்பட்டவர்களாக நடத்துகிற ஆணாதிக்கக் கருத்தியல் ஒழிக்கப்படுவதில் இருக்கிறது நிலையான தீர்வு.

கட்டுரையாளர் அ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக