செவ்வாய், 7 ஜூன், 2022

தமிழகத்தின் முதல் அனிமல் பாஸ் ஓவர் பாலம்; மதுரை அருகே அமைகிறது

 puthiyamugam.com : தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை – திண்டுக்கல் எல்லை அருகே வாடிப்பட்டி வகுத்து மலைப்பகுதியில், வன விலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்து செல்வதற்காக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் அமைய உள்ளது.’பாரத்மாலா பரியோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை, 555 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கி 80 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை, பாலமேடு அருகே, வகுத்து மலை வனப்பகுதி வழியாக அமைக்கப்படுகிறது. எனவே, அந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு மாடுகள், முயல்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வன விலங்குகளை பாதுகாக்க, விலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.


வனத்தில் விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் போது, குறுக்கிடும் சாலையால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரண்டு மலைகளை இணைத்து, 210 மீட்டரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

அதற்கு தமிழக வனத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டில் முடியும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா கூறியதாவது:

ரோட்டில் வன விலங்குகள் கடந்து சென்றால் விபத்தில் சிக்கி பலியாகும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த மேம்பாலம் உதவும். பாலத்தில் ஒலி, ஒளி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். வனத்துறை சார்பில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர் குட்டைகளும் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராதா மனோகர் : நான் வசிக்கும் கனடாவில் கூட இப்படியான மேம்பாலம் கிடையாது  
சில வருடங்களுக்கு முன்பு நான் டொரோண்டோவில் இருந்து மொன்றியல் வரும்போது அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு வாத்தும் அதன் குஞ்சுகளும் குறுக்கே ஓடி வந்தன வாகனங்கள் மிக அருகருகே தொடராக வந்தமையால் என்னால் நிறுத்தவவோ வேகத்தை குறைக்கவோ கூட முடியவில்லை  நான் ஏதாவது செய்திருந்தால் பெரிய தொடர் விபத்தே நடந்திருக்கும் அந்தளவுக்கு சங்கிலி தொடர்போன்று வாகனங்கள் வேகமாக வந்துகொண்டிருந்தன  . அந்த வாத்துக்கும்  குஞ்சுகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்கு தெரியாது   எனக்கு பின்னே வந்த வாகனங்களும் படுவேகமாக மிக நெருக்கமாக வருவதை கண்ணாடி வழியாக பார்த்தேன்  
இன்றுவரை என் மனதை மிகவும் துன்புறுத்தும் காட்சி அது
இந்த சம்பவத்தின் பின்பு கனடாவின் நெடுஞ்சாலைகளில் ஏன் பிராணிகள் கடந்து செல்வதற்கு உரிய சுரங்க பாதையோ அல்லது மேம்பாலமோ இல்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது .. இன்றுவரை இந்த கேள்விக்கு பதில் இல்லை
கனடா மிகப்பெரிய பூகோள பரப்பை கொண்ட ஒரு தேசம்  
இங்கு வாகனங்களில் அடிபடும் பிராணிகளின் தொகையும் அதிகம்
இதனால் நடக்கும் வாகன விபத்துக்களும் அதிகம்
தங்களின் இந்த செய்தியை உலக அளவில் கொண்டு செல்லவேண்டும்
தற்போது எல்லா நாடுகளிலும் தாறு மாறாக காடுகளை கிழித்து குறுக்கே பாதைகளை அமைத்து வருகிறார்கள்
இது ஒரு ஆக்கிரமிப்பு .. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?
மதுரையில் பிராணிகளுக்க்கான மேம்பாலம் அமைய காரணமான அத்தனை பேர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக