வெள்ளி, 17 ஜூன், 2022

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: கோபால கிருஷ்ண காந்தியை பரிந்துரைத்த தி.மு.க.,

 தினமலர் :  : ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை, தி.மு.க., பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில்,பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில், நேற்று முன்தினம் டில்லியில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை, ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அகாலி தளம், தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, பா.ஜ., எதிர்ப்பு கட்சிகளும் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் அனைத்தும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரை பரிந்துரைத்தனர். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அவர் மறுத்து விட்டார்.



அதைத் தொடர்ந்து சில கட்சிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெயரையும், சில கட்சிகள், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெயரையும் பரிந்துரைத்தன. கூட்டத்தில் தி.மு.க., சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு தான், கோபாலகிருஷ்ண காந்தி பெயரை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

2017-ல், எதிர்க்கட்சிகளின் சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட்டபோது, தி.மு.க., ஆதரவளித்தது. அதற்காக அப்போது, கருணாநிதியை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தார். காந்தி மட்டுமல்லாது, ராஜாஜியின் பேரன் என்பதாலும், தமிழகத்தில் வசிப்பதாலும், அவரது பெயரை, தி.மு.க., பரிந்துரைத்ததாக, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

77 வயதான கோபாலகிருஷ்ண காந்தி, ஐ.ஏ.எஸ்.,அதிகாரியாகவும், ஜனாதிபதியின் செயலர் மற்றும் வெளிநாட்டு துாதராகவும் இருந்தவர். ஜனாதிபதி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை ஏற்க வேண்டும்என, மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், அகிலேஷ், தேவ கவுடா உள்ளிட்டோரிடம், டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்ததாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக