மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பாதிப்பு 100ஐ கடந்தது. நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தி கடந்த வாரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.
நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறார். மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக