Arsath Kan - Oneindia Tamil : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
''மகுடம் மறுத்த மாமன்னன்'' என்ற புத்தகத்தின் தமிழ் பிரதி வெளியிட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தனக்கு பதிலாக தனது பிரதிநிதியாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனை அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
இதனிடையே அந்த விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் எனவும் கூறினார். உடல்நிலை சரியில்லாத போதும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் புறப்பட்டதாகவும் ஆனால் மருத்துவர்கள் கண்டிப்புடன் ஓய்வெடுக்க கூறியதால் அவரால் வர இயலவில்லை எனக் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட தகவலால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தலைவருக்கு என்னாச்சு என அவரவருக்கு தெரிந்த உயர்மட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர். முதலமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு என்பது மிக மிக முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. வீட்டுத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைப்பார் என விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. தனக்கு பதிலாக தனது மனைவி துர்கா ஸ்டாலினை அந்த மணவிழாவுக்கு அனுப்பி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக