சனி, 4 ஜூன், 2022

கோவை பெண் ஊழியர் எரித்துக்கொலை- தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

 மாலைமலர் : கோவை இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார்.
அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


நவநீதன் தரப்பில் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்து.

போலீசார் அவர்களை தேடிச் சென்றபோது 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.

இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோர்ட்டில் நேற்று தொழில் அதிபர் நவநீதன் சரண் அடைந்தார். அவரை திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி ஜெயிலில் நவநீதன் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

நவநீதனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவரை திருச்சி ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் எனவும் மனு செய்கிறார்கள்.

இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது. அப்போது நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே நவநீதனின் மனைவி எங்கு தலைமறைவாகி உள்ளார் எனவும் விசாரணை நடக்கிறது. அவரை பிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக