சனி, 4 ஜூன், 2022

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும் தொழிற்சங்கங்கள்!

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும்  தொழிற்சங்கங்கள்!

மின்னம்பலம் : தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக சிஐடியு தொழிற்சங்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் முழுமையாக தலையிட்டு வசூல் வேட்டை நடத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கள் நிர்வாகத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.
சிஐடியு, ஏஐசிசிசிடியு, டியுசிசி, டிடிபிடிஎஸ், டிஜிடிஇயு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் கடந்த மே 31ஆம் தேதி சென்னையில் உள்ள சிஐடியு மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றும் டாஸ்மாக் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக சீறிப்பாயும் அம்புகளாகவே அமைந்துள்ளன.

"திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளோடு இணைந்துள்ள பார்களுக்கு உரிமம் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நபர் வீதம் அவரது ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டு கடை ஊழியர்களை மிரட்டி பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடைக்கு வரும் பீர் வகைகள் மொத்தமாக பார்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடையில் விற்பனைக்கு ஏற்ப தினசரி மாமுல் கேட்டு மிரட்டுகின்றனர். இவர்களுக்கு ஒத்துவராத ஊழியர்களை பணியிட மாறுதல் செய்தும் உடன்படாத ஊழியர்கள் பணிபுரியும் கடையை மூடும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அதிகாரிகள் கையில் இருந்த டாஸ்மாக் நிர்வாகம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அதிக விற்பனையாகும் கடைகளில் குறைவான எண்ணிக்கையிலும் குறைவான விற்பனை கொண்ட கடைகளில் அதிக எண்ணிக்கையிலும் ஊழியர்கள் உள்ளதை கணக்கில் கொண்டு விற்பனை அடிப்படையில் பணி நிரவல் செய்திட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து, அது நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியினர், பார் உரிமையாளர்கள், துறை அமைச்சர் அலுவலக சிபாரிசின் பேரில் மட்டும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது இதில் பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன.

இந்த முறைகேடான பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்து வெளிப்படையான சுழற்சிமுறை பணியிட மாறுதல் அமல்படுத்த வேண்டும்"என்ற தீர்மானங்கள் இந்த டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் கூட்டத்தில் இயற்றப்பட்டன.

இது மட்டுமல்ல... " மாநிலம் முழுவதும் 5400 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளோடு இணைந்த பார்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் உரிமம் பெறாமல் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் நடத்துவதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பையும் பொருட்படுத்தாமல் அமைச்சரது ஆதரவாளர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மதுபான கடைகளுக்கு அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கிளப்புகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது இந்த கிளப்புகள் தங்களுடைய உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யாமல் பொதுமக்களுக்கும் விற்பனை செய்கின்றன. தனிநபர்களுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையிலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் புதிய உரிமங்கள் வழங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

டாஸ்மாக் நிறுவனத்தில் புரையோடி உள்ள நிர்வாக சீர்கேடுகளை களைந்திட நிர்வாக சீரமைப்பு குழு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைத்திட வேண்டும்" போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடைசி தீர்மானமாக போராட்ட தீர்மானத்தை கையில் எடுத்துள்ளது.

"டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு போட்டியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு நபரை நியமித்து ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது, பணியிட மாறுதல் செய்வது, கடையை மூடுவது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முறையற்ற பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். துறை அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு ஒத்துப்போகாத ஊழியர்களை பணி இடமாற்றம் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி வரும் ஜூன் 23ஆம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு அனைத்து டாஸ்மாக் தொழிற் சங்கங்கள் சார்பாக பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"என்று அறிவித்திருக்கிறது இந்தக் கூட்டு நடவடிக்கை குழு.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் சிஐடியு டாஸ்மாக் தொழிற் சங்க மாநில தலைவர் திரு செல்வனிடம், "டாஸ்மாக் பிரச்சினைகள் குறித்து முதல்வர், தலைமைச் செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் பேசுவதாக கூறி இருக்கிறீர்கள். துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இது பற்றி நீங்கள் பேசவில்லையா?" என்று கேட்டோம்.

"இத்தனை கோளாறுகளுக்கும் காரணமே அமைச்சர் செந்தில்பாலாஜி தான். அவரிடம் பேசி என்ன ஆகப் போகிறது. பிரச்சினைக்கு உரியவரே அவர்தானே. அவரிடம் போய் என்ன நியாயத்தை நாங்கள் எதிர்பார்க்க முடியும்? டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனமா அல்லது செந்தில்பாலாஜி பிரைவேட் கம்பெனியா என்று சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது. ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் மாவட்ட மேலாளர் டேபிளுக்கு பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் ஒரு டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார். அவர்தான் எங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அவர்கள் கேட்கும் சரக்கை கொடுத்து விடுங்கள் என்றும் அவர்கள் கேட்கும் காசை கொடுத்து விடுங்கள் என்றும் எங்கள் அதிகாரிகளே எங்களுக்கு உத்தரவுபோடுகிறார்கள். எனவே இது அரசு நிறுவனமே அல்ல செந்தில் பாலாஜி நிறுவனமாகவே செயல்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் செந்தில் பாலாஜியிடம் எப்படி புகார்களை சொல்ல முடியும்?

அதனால்தான் முதல்வர், தலைமைச் செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் பேச முடிவு செய்துள்ளோம்.

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். முதல்வர் சந்திக்க நேரம் கொடுத்தால் டாஸ்மாக் நிர்வாகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதிக்கம் குறித்து விரிவாக அவரிடம் எடுத்துரைப்போம்" என்றார் திருச்செல்வன்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கரூர் ரமேஷ் என்பவரிடம் நடத்திய செல்போன் உரையாடலை மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வசூல் செய்து கொடுக்குமாறு அந்தக் கரூர் நபர் கேட்டதாகவும் அதற்கு சூப்பர்வைசர் கொடுக்க மறுப்பதாகவும் அந்த ஆடியோ உரையாடல் அமைந்திருந்தது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வந்தநிலையில் அடுத்த நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி அந்த சூப்பர்வைசர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு டாஸ்மாக் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அந்தக் கடையே மூடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் விழுப்புரத்தில் சிஐடியு உள்ளிட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொடர்ந்து இந்த புகார்களை டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் எழுப்பி வரும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரை அவர்களை அதிகாரபூர்வமாக அழைத்துப் பேசவோ பதில் அளிக்கவோ இல்லை.

இந்த பின்னணியில்தான் டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து செந்தில் பாலாஜி மீது முதல்வரிடம் புகார் அளிக்க தேதி கேட்டு இருக்கிறார்கள் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்.

அவர்களுக்கு முதல்வர் சந்திக்க நேரம் கொடுப்பாரா? அவர்களின் புகார்களுக்கு முதல்வர் செவி கொடுப்பாரா?

வேந்தன்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக