செவ்வாய், 21 ஜூன், 2022

பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அதிமுக

மின்னம்பலம் " வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில்... சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும்,  அதிமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அதில், “வரும் 23ஆம் தேதி வானகரத்தில்  நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என 2500 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.  பொதுக்குழுவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு  கடந்த 7 ஆம் தேதியே டிஜிபி, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது முடிவெடுக்காததால் மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. அதுபற்றியும் எந்த முடிவும் எங்களுக்கு அளிக்கப்படாததால்,  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.  

இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஜூன் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே, ‘கொந்தளிப்பான சூழ்நிலையில் பொதுக்குழுவை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு பற்றிய முடிவெடுக்கப்படும் என்கிறார்கள் அரசுத் தரப்பில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக