புதன், 8 ஜூன், 2022

பெட்ரோல் டீசலுக்கு அந்நிய செலாவணி இல்லாத இலங்கையில் 80 இலட்சம் வாகனங்கள்

வீரகேசரி  : இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமை நாட்டில் நீடித்திருக்கிறது.  மக்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல்  எரிபொருளை பெற முடியாமல் எரிவாயுவை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்வெட்டு அமுலில் இருக்கிறது.  மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்றனர். வரிசைகளிலேயே   உணவு உட்கொண்டு அங்கேயே   உறங்கும் நிலையில் மக்கள் இருக்கின்றனர்.  மிகவும் ஒரு இக்கட்டான கசப்பான அனுபவங்களை பெறக்கூடிய ஒரு பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டில் காணப்படுகிறது.
இந்த நெருக்கடி நிலைமை நாட்டில் அரசியலிலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி  அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்கள் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன.   இறுதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை  அமைக்கப்பட்டு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.



ரணில் தலைமையிலான அமைச்சரவை தற்போது பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.   ஜப்பான் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகின்றன.  இலங்கைக்கு எப்படியாவது டொலர் கடனுதவியை பெற்று தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எனினும் அவை மிகவும் மந்த கதியிலேயே காணப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.  இன்னும் நான்கு மாதகாலமளவில் மூன்று பில்லியன் டொலர் கடனுதவி பகுதி பகுதியாக சர்வதேச நாணய நிதியம்  வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையில் இந்த எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனங்களின் நிலைமை தொடர்பாக இங்கு ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியமாக இருக்கின்றது.  வருடமொன்றுக்கு இலங்கை 21 பில்லியன் டொலர்களை செலவு செய்து இறக்குமதியை மேற்கொள்கிறது.  அந்த 21 பில்லியன் டொலர் செலவிலான  இறக்குமதியில் கணிசமான அளவு எரிபொருள் இறக்குமதிக்காக  செலவிடப்படுகின்றது.  2020 ஆம் ஆண்டில் 3 பில்லியன் டொலர்கள் எரிபொருளுக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

2021 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களும் 2019 ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் டொலர்களும் 2018 ஆம் ஆண்டு 4.1 பில்லியன் டொலர்களும்   எரிபொருள் இறக்குமதிக்காக  செலவிடப்பட்டிருக்கிறது.

2022ஆம் ஆண்டில் எரிபொருள் செலவு மிக அதிகமாக பதிவாகும் என்று கூறப்படுகிறது.  காரணம் தற்போதைய சூழலில் மாதம் ஒன்றுக்கு 500 மில்லியனுக்கும் மேற்பட்ட டொலர்கள் எரிபொருள் இறக்குமதிக்காக தேவைப்படுகின்றன. சர்வதேச சந்தையில்   மசகு எண்ணெயின் விலை அதிகரித்து இருக்கின்றமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக காணப்படுகிறது.   இந்நிலையில் இலங்கையில் வாகனங்களின் பாவனை மிக அதிகமாக இருக்கின்றது.  21 மில்லியன் சனத்தொகை கொண்டிருக்கின்ற இந்த நாட்டில் கிட்டத்தட்ட   அதிகளவான வகையில் வாகனங்கள் காணப்படுகின்றன.

அதாவது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதி முற்றாகத் நிறுத்தப்பட்டது.  இந்த வருடத்திலும் இதுவரை வாகன இறக்குமதி  நிறுத்தப்பட்டிருக்கின்றது.  இவ்வாறு இரண்டரை வருடங்கள் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டும் கூட எந்தளவு தூரம் வாகனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.

இலங்கையில் காணப்படும் வாகனங்கள்

கார்கள்                                      –  900338  

‍மோட்டார் சைக்கிள்கள்         –  4,827,719

முச்சக்கர வண்டிகள்              –  1,184,320

பஸ்கள்                                        –  112,864

வேன்கள்                                     –  449,323  

லொறி வகை வாகனங்கள்    –  383,873  

ட்ரெக்டர்கள்                                392,046

நிதியமைச்சின் வருடாந்த நிதி அறிக்கையின் தகவல்களின் படி  இலங்கையில்  900338  கார்கள் காணப்படுகின்றன.  அதேபோன்று  மோட்டார் சைக்கிள்களை பொறுத்தவரையில் 4,827,719 உள்ளன.  அத்துடன் 1,184,320  முச்சக்கர வண்டிகள் பாவனையில் உள்ளன.

மேலும் நாட்டில் 112,864   போக்குவரத்து பஸ்கள் உள்ளன.     449,323  வேன்கள்  உள்ளன.  பொருட்களை விநியோகம் செய்யும் லொறி வகையிலான  வாகனங்கள் 383,873  நாட்டில் காணப்படுகின்றன. 392,046 ட்ரெக்டர்களும் நாட்டில் உள்ளன.   இவை அனைத்தும் பெற்றோல் டீசல் போன்றவற்றில் இயங்குகின்ற வாகனங்களாகும்.  அந்தவகையில் இலங்கையில் 83 இலட்சத்து  31 ஆயிரத்து 702 வாகனங்கள் காணப்படுகின்றன.  அதாவது 21 மில்லியன்  சனத்தொகை உள்ள நாட்டில் 8 மில்லியன் வாகனங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் நாட்டில் எந்தளவு தூரம் வாகனங்கள் காணப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  இதனூடாக எரிபொருளின் தேவை எந்தளவு இருக்கும் என்பதையும் உணர முடிகிறது.  அண்மைக்காலமாகவே இலங்கையில் எரிபொருளுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுகின்றது.  அதுமட்டுமன்றி எரிபொருளுக்கு மிக அதிகளவான டொலர்களை செலவழிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

ஜூன் மாதத்திற்கு மட்டும்  இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 550 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன என்று எரிபொருள் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.  அதனடிப்படையில் பார்க்கும்போது 2022ஆம் ஆண்டில் 4 அல்லது 5 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட நிதி எரிபொருளுக்காக செலவாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதனால்  தற்போது இருந்தே  எரிபொருளுக்கு மாற்றாக வேறு சக்தி  வலு தொடர்பான சிந்தனை அவசியமாகின்றது.  கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றவர்கள் சிந்தித்து திட்டங்களை வகுக்க  வேண்டும்.  முக்கியமாக மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனங்களை அதிகளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தற்போது கூட இலங்கைக்கு தினமும்  பெற்றோல் அல்லது டீசல் கப்பல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.  அவற்றுக்கு டொலர்களை  செலுத்தி இலங்கைக்குள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தினந்தோறும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

வாகன வர்த்தகத்தை பொறுத்தவரையில் அது ஒரு மிகப் பெரிய துறையாக  இலங்கையில் காணப்படுகிறது.   இந்தளவுதூரம் எரிபொருளைப் பயன்படுத்துவதன் ஊடாக  நாட்டின் சுற்றாடல் பாதிக்கப் படுகின்றது என்பது குறித்தும் சிந்திக்கப்படுவது மிக அவசியமாக உள்ளது.

இரண்டரை வருடங்கள் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டும் கூட இந்தளவு தூரம் வாகனங்கள் நாட்டில் காணப்படுகின்றன.   இலங்கையின் வீதி கட்டமைப்பு  எரிபொருள் பாவனை என்னவற்றின் அடிப்படையில் இந்தளவு வாகனங்கள் என்பது எந்தளவு தூரம் பொருத்தமாக  இருக்கின்றது என்பது குறித்து சிந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  முக்கியமாக அதிக எரிபொருள் பாவனை மற்றும்  வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் போன்ற நிலைமைகள் உள்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

எனவே நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் எரிபொருள் பாவனை தொடர்பாக ஒரு முறையான வேலைத்திட்டம் அவசியமாகின்றது.  முக்கியமாக பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து என்பனவற்றை  சரியான முறையில் பலப்படுத்த  வேண்டும்.

மேலைத்தேய  நாடுகளில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகள் மிக அதிகமாக இடம்பெறுவதுடன் அதிக அளவு மக்கள் அவற்றை பயன்படுத்துகின்றனர்.  இதனால் எரிபொருள் பாவனையும் வரையறுக்கப்படுகின்றது.  இலங்கை தற்போது மிகப்பெரிய ஒரு நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பதால் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் இறக்குமதி டொலர்களை மிகவும் கஷ்டப்பட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் திரட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது  என்பதும்  முக்கியமானதமாகவே  உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக