வியாழன், 9 ஜூன், 2022

ரூ.50 ஆயிரம் லஞ்சம்.. மகன் உடலை வாங்க வீடு, வீடாக பிச்சை எடுத்த பெற்றோர்கள்... பீகார்

மாலை மலர்  :  9 ஜூன் 2022 :  மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.
இந்த நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சமஸ்திபூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.


தனது மகன் உடலை தரும்படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கேட்டார்.
ஆனால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடலை தருவோம் என்று ஊழியர்கள் மகேஷ் தாகூரிடம் கூறினார்.

ஏழையான அவரிடம் பணம் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்துக்காக ஊர் மக்களிடம் பிச்சை எடுக்க மகேஷ் தாகூர் முடிவு செய்தார்.
அவர் தனது மனைவியுடன் சமஸ்திபூர் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று தனது நிலைமையை கூறி பிச்சை கேட்டார்.
அவருக்கு பலர் பணம் கொடுத்தனர். மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக மகேஷ் தாகூர் கூறும்போது, எனது மகன் உடலை கொடுக்க ஆஸ்பத்திரி ஊழியர்கள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாங்கள் மிகவும் ஏழைகள். எங்களால் எப்படி ரூ.50 ஆயிரத்தை கொடுக்க முடியுமா? இதனால் பிச்சை எடுத்தோம் என்றார். அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் அடிக்கடி கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பணம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும்போது, "லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக