BBC : இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காக மேலதிக உதவியாக இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்றைய ஜி7 உச்சிமாநாட்டில் அறிவித்தார்.
அமெரிக்கா மேற்கொண்ட ஏனைய சமீபத்திய நிதியளிப்பு அறிவிப்புகளின் தொடராக மேற்கொள்ளப்படும் இந்த புதிய உதவிக்கான அறிவிப்பானது தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் தேவையுடைய இலங்கையர்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியளிப்பானது எதிர்வரும் 15 மாத காலப்பகுதியில் 800,000 இற்கும் மேற்பட்ட இலங்கைச் சிறார்களுக்கு உணவளிக்கும் ஒரு பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிசெய்வதையும் மற்றும் 27,000 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
இலகுவில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இலங்கை சமூகங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாய உதவிகள் மற்றும் பண பங்களிப்பு ஆகியவற்றின் ஊடாக சுமார் 30,000 விவசாயிகளுக்கு உதவிசெய்யவும் இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது.
“இலங்கைக்கான மேலதிக உதவியாக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி பைடன் மேற்கொண்ட இந்த அறிவிப்பானது, உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களதும் பொருளாதார நல்வாழ்வு என்பன தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை நிரூபிக்கிறது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார்.
“பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிசெய்வதுடன் இந்த உதவியானது, அது மிகவும் தேவைப்படும் சமூகங்கள் – மற்றும் சிறார்களை – சென்றடைவதை அமெரிக்கா உறுதி செய்யும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று அறிவிக்கப்பட்ட 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியானது, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளாக அண்மையில் அமெரிக்கா உறுதியளித்த கிட்டத்தட்ட 12 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது. இவ்வறிப்புடன் 2022 ஜூன் 16ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகளின் மொத்தப் பெறுமதி 32 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது.
இந்நிதியளிப்பானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்படும் மற்றும் இது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் தாரதரங்களைக் கடைப்பிடிக்கும் பங்காளர்களுக்கு வழங்கப்படும். நிதியளிப்பானது கணக்கீடு செய்யப்படுவதையும், உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை உதவி சென்றடைவதையும் இது உறுதி செய்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக