திங்கள், 20 ஜூன், 2022

நடுவான் விபத்தில் இருந்து தப்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும். இலங்கை பைலட்டின் சாதனை 2 Planes 15 Miles Apart At 35000 Feet Collision Avoided

Madhavan P - tamil.behindwoods.com : இரு விமானங்கள் நேருக்கு நேராக மோத இருந்த நிலையில், கடைசி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த விமானிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
2 Planes 15 Miles Apart At 35000 Feet Collision Avoided
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கிளம்பி இலங்கை தலைநகர் கொழும்புக்கு பறந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், இங்கிலாந்து விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்தது. அப்போது, அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. இதனால் விமானி சற்றே குழப்பமடைந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து 275 பயணிகளுடன் கிளம்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் துருக்கி வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த வேளையில்தான் விமானிக்கு அந்த தகவல் கிடைத்திருக்கிறது. 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தை 35,000 அடி உயரத்தில் பறக்குமாறு அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்திருக்கிறது.

ஆனால், 15 மைல் தொலைவில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருப்பதை விமானி அறிந்திருக்கிறார். இதனையடுத்து இந்த விஷயத்தை அங்காரா விமான கட்டுப்பாட்டு அறைக்கு சொல்லியுள்ளார் அந்த விமானி.

சாமர்த்தியம்

விமானி கூறியதை பரிசோதித்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொஞ்ச நேரத்தில் அடுத்த தகவலை அனுப்பியிருக்கிறார்கள். அதில், 35,000 அடி உயரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருப்பதால் 33,000 அடி உயரத்திலேயே பறக்குமாறு அதிகாரிகள் விமானியிடம் தெரிவித்திருக்கின்றனர்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலை மறுத்து, விமானத்தின் உயரத்தை அதிகரிக்க விமானி மறுக்கவே, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த இலங்கை விமான போக்குவரத்து துறை அந்த விமானிக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு எங்களது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாய் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 250 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுவானில் நேருக்கு நேர் இரண்டு விமானங்கள் மோத இருந்த நிலையில், சரியான நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த விமானிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக