திங்கள், 30 மே, 2022

ஒன்றிய தலைவரும் மாநில தலைவரும்

 Muralidharan Pb : மோடியும் ஸ்டாலினும்..   
ஒப்பிட முடியாத இரு தலைவர்கள். ஒரே மேடை என்பது இரு கட்சியினரும் கனவிலும் எதிர்பாராத ஒன்று.
இருப்பினும் அரசு விழா என்பதால் நடந்தேறி விட்டது. ஆகவே இப்பதிவு‌.
26.5.2022 அன்று நலத்திட்டங்கள் நேரு விளையாட்டரங்கில் நடந்த தொடங்கி வைக்கும்  நிகழ்வு கூட்டத்தில் ஒரு போட்டி. அது ஒன்றிய பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆனது.
ஸ்டாலின் கையில் புள்ளிவிவரங்களும் மக்களின் வாழ்வாதாரம், சமூகநீதி மற்றும் சுயமரியாதை உணர்வுகளை ஆயுதங்களாக்கி அவற்றை சொற்களாகத் வார்த்திருந்தார்.
மோடியோ கலாச்சாரம் பண்பாடு தமிழின் வர்ணஜால பெருமைகளை வியூகமாக திட்டமிட்டிருந்தார்.
ஸ்டாலின் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் மைல்கல் சாதனைகளை அடுக்கியதோடு தனது ஓராண்டு ஆட்சியும் அகில இந்திய வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு பற்றியும் ஆணித்தரமான விழுமியங்களை அடுக்கினார்.
மோடி தனக்கு இருக்கும் தமிழ்நாடு பற்றிய காதலை(!?) வர்ணஜாலங்களோடு உடல்மொழியோடு வெளிப்படுத்த மெனக்கெட்டார்.
ஸ்டாலின் இறுதியாக தனது கச்ச தீவு மீட்பு, ஜிஎஸ்டி நிலுவை,  நீட் விலக்கு, இந்திக்கு இணையான தமிழ் ஆட்சிமொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய 5 கோரிக்கைகளை மோடி முன்பு வைத்து முடித்தார்.
முதலில் பேசியதால் ஸ்டாலினுக்கு பதிலை மோடியிடம் எதிர்பார்த்திருந்தனர் மக்கள். ஆகவே நேரடி பதிலைத் தவிர்த்த மோடியின் வெற்று வார்த்தை ஜாலங்களை எளிதில் கடந்து சென்றுவிட்டனர்.
ஸ்டாலினிடம் மக்களின் நாடித்துடிப்பு இருந்தது. மோடியிடம் வார்த்தை துடிப்பு இருந்தது.
ஸ்டாலின் நீண்டகால பயன் மற்றும்  வளர்ச்சியை மையமாக வைத்து பேசினார். மோடி ஒரு விருந்தினரைப் போல மக்களை உடனடியாக கவர்வதில் கவனம் செலுத்தினார்.
ஸ்டாலின் ஒன்றியம், கூட்டாட்சி போன்ற சொற்களை பிரதமர் முன்பே பலமுறை பயன்படுத்தி "நாங்க இப்படித்தான்டா" என்று போட்டு வைத்தார். கலைஞரின் உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற பஞ்ச்சை சொல்லி முடித்தார்.
மோடி 'பொங்கல்', 'புத்தாண்டு' 'செந்தமிழ்' இந்த சொற்களை தனது பேச்சின் அலங்காரங்கள் என்று நினைத்திருந்தார். மதுரை to மலேசியா, நாமக்கல் to நியூ யார்க், சேலம் to சௌத் ஆப்ரிக்கா போன்ற எதுகை மோனைகளையும், மொழி பெயர்ப்பாளரின் ஏற்ற இறக்க தொனியையும், தனது உடல்மொழியையும்  நம்பி பேசினார்.
மொத்தத்தில் மோடியின் உரை ஒரு 'கலக்கப்போவது யாரு' கலைஞனின் உரையில் சற்றே அக்கறை கலந்து பேசியது போல இருந்தது.
ஸ்டாலினின் உரை, தேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியரின் ஆய்வுரையில் வீரியத்தை கலந்து பேசியது போல இருந்தது.
கரிகாலன் கலைஞரிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக