மின்னம்பலம் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று மே 18ஆம் தேதி விடுதலை செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மே 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெறுகிறது.
மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி சிதம்பரம் காந்தி சிலை அருகே தன் வாயில் வெள்ளை துணியோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
"உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு காங்கிரஸ் கட்சிக்காரர்களின் ரத்தம் கொதிக்கிறது. நாங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக போராடவில்லை. இந்தத் தீர்ப்புக்கு எதிராக தான் போராடுகிறோம்.
பேரறிவாளனை நேற்று முதலமைச்சர் விமான நிலையத்தில் சந்தித்தது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த காட்சியை பார்த்து எங்கள் ரத்தம் கொதிக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் எங்கள் தயவில் ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது. 30 தொகுதிகளில் ஆயிரம் ஓட்டுக்கள் கம்மியாக வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது எங்களுடைய ஓட்டு அல்லவா?
ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியை ஒரு முதலமைச்சர் கட்டியணைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திமுக எங்கள் கூட்டணியில் இருக்கிறது.
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதைப் போல தன்னுடைய தம்பி என்று எங்கள் தலைவர் ராகுல் காந்தியை கட்டிப் பிடிக்கிறார். அவரது தந்தை ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் தகர்த்த பேரறிவாளனையும் கட்டிப் பிடிக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் எங்கள் கேள்வி. பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு இதே வழக்கில் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
இந்த போராட்டம் இன்று ஒரு மணி நேரத்தோடு முடிந்துவிடும். ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்துவோம்" என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக