வியாழன், 26 மே, 2022

மோடி சென்னை வருகை - ஆந்திர கர்நாடக முதல்வர்களும் வருகை! சென்னைக்கு வெளியே போராடுமாறு கூட்டணி .

 மின்னம்பலம் : பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் குறைக்க வேண்டும், அவற்றின் மீதான அனைத்து செஸ், சர்சார்ஜ் வரிகளையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் அறிவித்துள்ளளன.
கடந்த மே 17 ஆம் தேதி இது தொடர்பாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை மூலம் போராட்ட நிகழ்ச்சிகள் பட்டியலையும் வெளியிட்டிருந்தனர்.


அதில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தேசிய அளவில் நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாட்டில் இணைந்து செயல்படுவோம். மே 26, 27 தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், 25 முதல் 31 ஆம் தேதி வரை வீடுவீடாக ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்" என்றும் முடிவெடுத்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இதன்படி நாளை மே 26-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போராட்டத்திற்கு தயாராகிறார்கள் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்.

இதற்கிடையே நாளை மே 26-ஆம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தர இருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை துறை, ரயில்வே திட்டங்கள் தொடர்பான விழாவில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைமைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மூலம் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"நாளை மே 26 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு அரசு விழாவில் பங்கேற்க வருகிறார். இந்த நிலையில் உங்களின் போராட்டங்களை சென்னைக்கு வெளியே நடத்திக் கொள்ளுங்கள். சென்னைக்குள் பிரதமரை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்திட வேண்டாம். இதை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்" என்று கூட்டணிக் கட்சி தலைமைகளிடம் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான போலீசார் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் நிலையில்... இன்று பிற்பகல் முதலே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது சென்னை.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக