புதன், 25 மே, 2022

பிறப்புறுப்புச் சிதைப்பு - சுன்னத் : குழந்தைகளுக்கு எதிரான உடலியல் வன்முறை!

றிஷ்வின் இஸ்மத்  :  சிறுவயதினருக்கு எதிரான சுன்னத் (விருத்தசேதனம்) எனும் உடலியல் வன்முறை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
*மிகச் சிலருக்கு மட்டும் அரிதாக வரக் கூடிய நுனித்தோல் சார் நோய்களைக் காரணமாகக் காட்டி அனைத்து ஆண்களுக்கும் (குழந்தையிலேயே) விருத்தசேதனம் செய்வதானது, எப்போதாவது ஒரு காலத்தில் பல்வலி வரலாம் என்று பயந்து அனைத்துப் பற்களையும் இப்பொழுதே கழட்டி (எடுத்து) விடுவதற்கு ஒப்பான மடத்தனம் ஆகும்.
இந்தக் குரூரமான செயல் சுன்னத், கத்னா, விருத்தசேதனம் போன்ற பெயர்களில் அறியப்படுகின்றது.
யூத, இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களில் ஒரு சிறு பிரிவினரும் ஆண்களுக்கு இந்த ஆணுறுப்பு மீதான உடலியல் வன்முறையை மேற்கொள்கின்றனர், இதற்கு மேலதிகமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிராக பெண்ணுறுப்புச் சிதைப்பு வன்முறை மேற்கொள்ளப் படுகின்றது.

பெண்களுக்கு எதிரான குறித்த இஸ்லாமிய வன்முறைக்கு ஆதாரமாக முஹம்மது நபியின் வழிகாட்டல்களும், போதனைகளும் இருக்கின்ற அதே நேரம், பெண்ணுறுப்புச் சிதைப்பை அழகான நவீன வார்த்தைகளால் அலங்கரித்து, போலி அறிவியலைப் (pseudo-science) பயன்படுத்தி நியாயப் படுத்துவதுடன், பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு வழிகாட்டும் இஸ்லாமிய மூலாதரங்களை பெருமையாக எடுத்துக் காட்டி ஆக்கங்கள், இணையத்தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. (அத்தகைய ஒரு ஆங்கில ஆக்கத்தை இங்கே காணலாம் : https://www.aljumuah.com/circumcision-for-the-muslim-woman-part-1-of-2/ )


இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள காரணத்தால் பெண்ணுறுப்புச் சிதைப்பு இன்றும் முஸ்லிம் சமூகத்தில் நடைபெறுகின்றது, அதனை கற்றுப் பட்டம் பெற்ற MBBS வைத்திய கலாநிதிகள் மேற்கொள்கின்றார்கள். சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அத்தகைய MBBS வைத்தியக் கலாநிதிகள் பற்றிய விபரங்களுடன் இட்ட பதிவை இங்கே காணலாம் : https://www.facebook.com/rishvin/posts/10213473584217166 இலங்கையில் கூட பெண்ணுறுப்புச் சிதைப்பை ஆதரிக்கும் பலமான இஸ்லாமிய அமைப்புக்கள் உள்ளன. அவை பெண்ணுறுப்புச் சிதைப்பை ஆதரிப்பது மட்டுமல்ல, அந்தக் குரூரத்திற்கு அரச அங்கீகாரமும் வேண்டி நிற்கின்றன. உலமா சபை எனப்படும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்புடன் இணைந்து நிற்கும் ஏனைய பிற்போக்குவாத அமைப்புக்கள் எவை என்று அறிய விரும்பினால் https://www.dailymirror.lk/article/Muslim-groups-call-for-female-circumcision-to-be-medicalised-155186.html இல் உள்ள ஆங்கில ஆக்கத்தை வாசித்துப் பாருங்கள். பெண்ணுறுப்புச் சிதைப்பினை நியாயப் படுத்த பல போலிக் காரணங்கள் கூறப்பட்டாலும் கூட, மதத்தைக் கண்மூடிப் பின்பற்றுகின்ற மடத்தனமும், பெண் பாலியல் சுகத்தை முழுமையாக அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் அதற்கு ஈடுகொடுத்து சமாளிக்க முடியாமல் போய்விடலாம் என்கின்ற ஆணாதிக்கத்தின் நடுக்கமுமே முக்கிய காரணங்களாக உள்ளன.



பெண்களுக்கு எதிரான பெண்ணுறுப்புச் சிதைப்பு வன்முறையை இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் மட்டுமே ஆதரித்தாலும், ஆணுறுப்புச் சிதைப்பு வன்முறையை பல்வேறு தாரப்புக்கள் ஆதரிப்பதுடன் அந்த ஆதரவுக்குத் துணையாக பல்வேறு போலி அறிவியல் (pseudo-science) வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆணுறுப்பின் நுனித்தோலை நீக்காமல் விட்டால் ஆபத்தான நோய்கள் வரும் என்பதே மிக முக்கியமான வாதம் ஆகும். இந்த வாதம் எவ்வளவு போலியானது என்பதைப் பார்ப்போம்.


உலக சனத்தொகையில் சுமார் 38% இற்கும் குறைவான ஆண்களுக்கே விருத்தசேதனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 14% இற்கும் குறைவு என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது உலகளாவிய ரீதியில் 62% ஆன ஆண்கள் விருத்தசேதனம் செய்யப் படாதவர்களாக உள்ளனர், இந்தியா, இலங்கையில் 86% இற்கும் அதிகமானவர்கள் விருத்த சேதனம் செய்யப்படாதவர்கள். உங்கள் நகரத்தில், கிராமத்தில் பொதுவான மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் பல், கண் சார்ந்த நோய்கள், குறைபாடுகளுக்கான தனியான சிகிச்சை நிலையங்கள் இருக்கும், அவற்றிற்கு தினமும் ஆயிரக்கணக்கனவர்கள் செல்வார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். நுனித்தோல் நீக்காமையால் ஏற்படும் நோய்களுக்காக சிகிச்சை பெற தினமும் எத்தனை பேர் மருத்துவர்களிடம் செல்கின்றார்கள்? கண், பல் சார்ந்த நோய்கள், குறைபாடுகளுக்காக சிகிச்சை பெறச் செல்கின்ற ஆண்களின் எண்ணிக்கையில் ஒரு 10% ஆனவர்களாவது ஆணுறுப்பின் நுனித்தோல் நீக்கமையால் நோய் ஏற்பட்டுச் சிகிச்சை பெறச் செல்கின்றார்களா? இருதய நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்ற அளவுக்காவது ஆணுருப்பின் நுனித்தோல் நீக்காததால் நோய்க்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை இருக்கின்றதா? இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை தேடினால், நுனித்தோல் நீக்காமையால் நோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெறச் செல்பவர்களின் எண்ணிக்கை என்பது கணக்கில் கொள்ளப்பட முடியாத ஒன்று அல்லது மிகச் சொற்பமான ஒன்று என்பதை அறிந்து கொள்ளலாம்.

நுனித்தோல் நீக்காத ஆண்களில் புறக்கணிக்கத் தக்க அல்லது மிகச் சிறிய எண்ணிக்கையினருக்கு அபூர்வமாக ஏற்படக் கூடிய நோய்களை பயங்கரமாக ஊதிப் பெருப்பித்துக் காட்டி, அனைத்து ஆண்கள் மீதும், குறிப்பாக குழந்தைகள் மீது ஆணுறுப்புச் சிதைப்பு எனும் உடலியல் வன்முறையை மேற்கொள்ள முயல்வது காட்டுமிராண்டித் தனமானது. எப்போதோ ஒரு காலத்தில் ஒரு பல்லில் நோய் ஏற்படக் கூடும் என்று சொல்லி யாரும் அனைத்துப் பற்களையும் முளைக்கும் பொழுதே கழட்டி (எடுத்து) விடுவதில்லையே! ஆகவே போலி அறிவியலைப் பயன்படுத்தி மத நூல்களில் உள்ள காட்டுமிராண்டித் தனத்தை நவீனப் படுத்த முனைவது நிறுத்தப்பட வேண்டும், பாலியல் வேறுபாடின்றி சிறுவர்கள் மீதான இத்தகைய உடலியல் வன்முறைகள், சித்திரவதைகள் என்பன தடை செய்யப்பட வேண்டும்.


ஆணுறுப்பில் அல்லது பெண்ணுறுப்பில் வெட்டி நீக்க வேண்டிய பகுதிகள் இருக்கின்றன என்பதற்கு நீங்கள் உடன்படும் பொழுதே உங்கள் இறைவன் சரியாகப் படைக்கத் தெரியாதவன் என்பதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றீர்கள்.


எப்பாலினத்தவர்களாக இருந்தாலும் சிறுவர்களின் பிரப்புறுப்புச் சிதைப்பில் (விருத்த சேதனம்) ஈடுபடுபவர்களுக்கு கடூழியச் சிறைத் தண்டனை வழங்க அரசுகள் சட்டமியற்ற வேண்டும். மதத்தைக் கண்மூடித்தனமாகப் பெரியவர்கள் விரும்பினால் அவர்களின் பிறப்புறுப்பின் நுனித்தோலை மட்டுமல்ல, பிறப்புறுப்பையே அடியோடு வெட்டி எடுத்து அல்லாஹ்வுக்காக, கடவுளுக்காக அர்ப்பணித்து விட்டுப் போகட்டும். ஆனால் குழந்தைகள் மீது இந்த உடலியல் வன்முறையை, சித்திரவதையைக், கொடுமையை நிகழ்த்தாமலிருக்கட்டும். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள், அவர்களுக்கு உங்கள் குரூர கடவுளும், முட்டாள் மதமும் தேவையில்லை.


-றிஷ்வின் இஸ்மத்
25.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக