செவ்வாய், 17 மே, 2022

நூறு நாள் வேலைத் திட்டம் நகர்ப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

  News18 Tamil  :   திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.‌ தேனி அல்லிநகரம் பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் ஆரம்ப காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.‌ ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அன்றைய அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருந்தது.‌


இன்னும் ஓரிரு மாதங்கள் அந்த ஆட்சி நீடித்திருந்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரந்திருக்கக் கூடும்.‌ நல்வாய்ப்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று சில மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டதாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மற்றும்  அதிமுகவினரைப் போல  தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல திமுகவினர்.‌ மாறாக எப்போதும் மக்கள் பணியாற்றுபவர்கள் என்றார்.

அண்மையில் நிகழ்ந்த லாக்கப் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.‌ முந்தைய அதிமுக ஆட்சி போல இல்லாமல் இன்றைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டைப் போல இந்த வருடமும் ஜூன் முதல் தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். கூட்டுறவு மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இன்னும் ஆறு மாத காலங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும். மேலும், சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Must Read : பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

இன்னும் ஓராண்டில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிராமங்களைப் போன்று பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் கல்வியியலாளர்கள், நிர்வாகத் திறன் படைத்தவர்கள் என திறமைசாலிகளைத் தான் திமுக தேர்ந்தெடுத்துள்ளது.‌ அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என உள்ளாட்சியில் பதவி வகிக்கும் பெண் தலைவர்களின் கணவன்மார்களின் தலையீடுகளை தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட ஓ.பி.எஸ்-க்கு அமைச்சர் பதிலளித்தார்.

மேலும், இன்றைக்கு  தலை இல்லாத முண்டமாக, தலைமை இல்லாத கட்சியாக அதிமுகவின் நிலை உள்ளது.‌ இந்த கட்சி நீடிக்கவே நீடிக்காது.‌ தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக, தான் ஆட்சி அமைக்கும் எனக் கூறினார். இந்த பொதுக் கூட்டத்தில் திமுக பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் உட்பட ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - பழனிகுமார், தேனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக