செவ்வாய், 31 மே, 2022

கோயில் பெயரில் நிதி! பாஜகவின் கார்த்திக் கோபிநாத் - யூடியூபர் கைது!

 மின்னம்பலம் : பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இங்குள்ள மலையில் துணை கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது.
சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, ஆஞ்சநேயர் உட்பட ஏராளமான சிலைகள் இருந்தன.


இந்நிலையில் கடந்த ஆண்டு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிற்பங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாகக் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா கால்நாட்டான் குடியை சேர்ந்த நாதன் என்பவரைப் பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த சூழலில் பாஜக ஆதரவாளரும் இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோயிலைப் புனரமைக்கப் போவதாக 34 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருக்கோவில் செயல் அலுவலர் அரவிந்தன் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கோபிநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், “சென்னை முத்தாபுதுப்பேட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் 'இளையபாரதம்' என்ற பெயரில் யூட்டியூப் வலைதளம் நடத்தி வருகிறார். இவர் மிலான் ஃபண்ட் ரைசர் என்ற தளம் மூலமாகக் கோயில் சிலைகளைப் புனரமைப்பதற்காகக் கூறி இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதியைப் பெறாமல் பொதுமக்களிடம் நிதி வசூலித்து சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டதாக அரவிந்தன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்: 4/2022 U/s 406, 420 IPC and 66 (D) OF I.T Act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, "கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது கண்டனத்திற்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்குத் தமிழக பா.ஜ.க துணை நிற்கும்.

அவருக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அவரது தந்தையிடம் உறுதி அளித்துள்ளேன். வழக்கம்போல் அறிவாலயம் மிரட்டும் உத்திகளை கையாளுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் ஆவடி ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக