சனி, 7 மே, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 மாலைமலர் : தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாசித்தார். அவர் பேசியதாவது:-
ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மனம் மகிழும் சில அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான ஐந்து பெரும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


முதலாவது திட்டம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இரண்டாவது திட்டமானது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ற எடையும் இல்லை; வயதுக்கேற்ற உயரமும் இல்லை. மிக, மிக, மெலிந்து இருக்கின்றார்கள். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து இதற்கென தனியாக ஒரு திட்டத்தைத் தீட்ட நான் ஆலோசனை கூறினேன்.

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், குழந்தைகள் பயனடைவார்கள். தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.

மூன்றாவது திட்டம் ‘தகைசால் பள்ளிகள்’ என்ற திட்டம்!  ‘Schools of Excellence’  என்று இதற்குப் பெயர். சென்ற ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான், அங்கு டெல்லி அரசின் சார்பில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டேன். அப்போது டெல்லியினுடைய முதலமைச்சரே அழைத்துக்கொண்டு சென்று அதையெல்லாம் விளக்கிச் சொன்னார்கள். இதேபோல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்று அங்கேயே நான் சொல்லிவிட்டு வந்தேன். அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலில், முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். அனைத்துக் கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதேநேரத்தில், கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளியில் உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வகைத் திறன்களையும் வெளிக்கொண்டு வருவோம். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். அவர்களுடைய ஆளுமைத் திறன் அனைத்தும் மேம்படுத்தப்படும். இந்தவகைப் பள்ளிகளைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கிறேன்.

நான்காவதாக அறிவிக்கக்கூடிய திட்டமானது நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல், நகர்ப்புரங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன. நகர்ப்புர மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புர மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். இந்த 708 புதிய நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும்.

இந்த மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும் காலையும் மாலையும் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐந்தாவது திட்டம் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நான் பல்வேறு ஊர்களுக்குச் சென்றேன்; மக்களைச் சந்தித்தேன்; அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்த மனுக்களை ஒரு பெட்டியில் வைத்து பூட்டினோம். வெற்றி பெற்றதும் திறப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன். வெற்றி பெற்றோம். இந்த மனுக்களை பரிசீலிப்பதற்காகவே ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித் துறை உருவாக்கப்பட்டு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

இது மக்களுக்குப் பெரும்பயனைத் தந்துள்ள காரணத்தால், இதே திட்டத்தை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதனடிப்படையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டமானது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள்.

அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை நீங்கள் அளிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்தப் பணிகளுக்காக மட்டும் இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தத் திட்டம் நேரடியாக, என்னுடைய கண்காணிப்பிலே நடைபெற போகிறது. எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு வரவில்லை; இருந்தாலும், அவருக்கு இங்கே நான் சொல்ல விரும்புகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களின் போடி தொகுதியாக இருந்தாலும், அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நடத்தப்படக்கூடிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டு தொடங்கக்கூடிய இந்நாளில் இத்தகைய ஐந்து மாபெரும் மகத்தான திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

என்னுடைய இலக்குக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர். அந்த இலக்கை அடைய தந்தை பெரியாரின் கொள்கை வலிமையும், பேரறிஞர் அண்ணாவின் மானுடப்பற்றும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் விடாமுயற்சியும் இனமானப் பேராசிரியரின் பொறுமையும் கொண்டு நான் எந்நாளும் உழைப்பேன்! உழைப்பேன்! உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! காப்பேன்! காப்பேன்!

இந்த முதலாண்டு முத்தான தொடக்கமாக அமைந்திருக்கிறது. இரண்டாமாண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப் போகிறது. இனி எந்நாளும் கழக ஆட்சி கலைஞரின் ஆட்சி என்பதை வரலாற்றில் பதிய வைக்க எனது ஆட்சிப் பயணத்தை உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக