Vigneshkumar Oneindia Tamil : கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கொரோனா பரவல், விவசாய துறை வீழ்ச்சி என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
கொரோனா கட்டுக்குள் வந்த பின்னரும் கூட இலங்கை பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பொருளாதார பாதிப்பு காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கடுமையாகச் சரிந்தது.
இதனால் அங்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்தது. காய்கறி, பழம், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மறுபுறம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால் எரிபொருளைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.போராட்டம்
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிடம் இலங்கை உதவி கேட்டது. இந்தியா தொடர்ந்து உதவி பொருட்களை அனுப்பி வரும் போதிலும், அது இலங்கை பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க உதவுவதாக இல்லை. இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த அந்நாட்டு மக்கள், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், பல அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கியது.
புதிய பிரதமர்
முதலில் பதவி விலக மறுத்த மகிந்த ராஜபக்ச, பின்னர் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் நேற்றைய தினம் பதவி விலகினார். இதையடுத்து இலங்கை நாட்டின் புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதில் கேள்வி நிலவியது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.
ரணில் விக்ரமசிங்கே
இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து புதிதாக 15 பேரைக் கொண்ட இலங்கை அமைச்சரவை நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மீட்டெடுப்பேன்
புதிதாகப் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே, "இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவாலை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன், அதை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்" என்றார். மேலும், இந்தியா- இலங்கை உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, வரும் காலத்தில் அது மிகவும் சிறப்பாக மாறும் எனப் பதில் அளித்தார். மேலும், போராட்டக்காரர்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என்றும் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக