வெள்ளி, 20 மே, 2022

ராகுல் காந்தியையும் கட்டிப்பிடிக்கிறீர்கள். பேரறிவாளனையும் கட்டிப்பிடிக்கிறீர்கள்? காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜினாமா!

கை கொடுத்த பேரறிவாளன்; தோள் கொடுத்த மு.க. ஸ்டாலின்- Dinamani

மின்னம்பலம் : பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், பேரறிவாளனை சந்தித்தபோது கட்டியணைத்துக் கொண்டார். இது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
'ராகுல் காந்தியையும் கட்டிப்பிடிக்கிறீர்கள். பேரறிவாளனையும் கட்டிப் பிடிக்கிறீர்கள்‌. இதை எப்படி எடுத்துக் கொள்வது' என்று நேற்று மே 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸார் கேள்வி எழுப்பினர்.
அதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியை கொண்டாடும் திமுக அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் சமூக தளங்களில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது கட்சிக்கு நல்லது என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான் இவர்களுக்கெல்லாம் பதில் செல்லும் வழியில் மே 19 மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி.

அதில், "உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ராஜீவ் காந்தியோடு சேர்த்து ஒன்பது போலீஸார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர், தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது.

கொலைகாரர்களுக்கு பரிந்துபேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என ஆதாரங்களை தெரிவித்ததாக அந்த விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில் இதுவரை 600 பேர் 700 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ள அழகிரி... அதையடுத்துச் சொல்லிய விஷயம் தான் முக்கியமானது.

"கொள்கை வேறு. கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப் போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை. யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது திமுகவோடு கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இவ்வாறு அறிவித்த சில மணி நேரங்களில் நேற்றிரவு தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

"உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்த கொலைக் குற்றவாளிகளைக் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே நான் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்று

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு நேற்று இரவு தனது ராஜினாமா கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு அனுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே திமுக கூட்டணி விஷயத்தில் தலைமைக்கு மாறான எண்ண ஓட்டம் நிலவுவது இதிலிருந்து தெரிகிறது.

- ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக