ஞாயிறு, 1 மே, 2022

மாரியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இருவர் தவறி விழுந்தனர் ..

  tamil.samayam.com : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்லமாங்குடி கிராமத்தில் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி இன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக மாரியம்மன் மற்றும் காத்தவராயன் சாமி அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் தீக்குண்டம் ஏற்றி 60 பக்தர்கள் தீ மிதிக்க தயாராகினர். இதற்காக முதலில் கரகம் ஏந்தி வந்த அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கரகத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் நடந்து சென்றார்.


ஆனாலும் சிறிது நேரத்திலேயே தடுமாறி ரமேஷ் தீக்குண்டத்தில் விழுந்து முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்தார். மேலும் அவரை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சக்தி விநாயகம் என்பவரும் அதேப்போல் தீக்குண்டத்தில் இறங்கி சென்றார்.

அப்போது சக்தி விநாயகமும் சிறிது நேரத்திலேயே தடுமாறி தீக்குண்டத்திலேயே விழுந்தார். இதனால் அவருக்கும் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக