திங்கள், 18 ஏப்ரல், 2022

யுவன் சங்கர் ராஜா : நான் கறுப்புப் திராவிடன், பெருமைக்குரிய தமிழன் ... இளையராஜாவுக்கு பதிலடி?

 zeenews.india.com :  இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  பல கட்சிகளும், முன்னணி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  
தமிழ்தான் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து பெரும் ஆதரவும் கிடைத்தது.  
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் இந்தித் திணிப்பை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த சர்ச்சை முடிவதற்குள் மோடியும் அம்பேத்கரும் என்று பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு மோடி அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.  இளையராஜாவின் இந்த கருத்து பலவித சர்ச்சையை ஏற்படுத்தியது சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.  இளையராஜாவிற்கு ஆதரவாக தமிழிசை சவுந்தரராஜன், ஜேபி நட்டா மற்றும் பாஜகவை சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன் என்ற கேப்ஷனுடன் கருப்பு நிற உடையணிந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  இது மோடிக்கு ஆதரவு தெரிவித்த இளையராஜாவிற்கு எதிரான பதிவா அல்லது ஏஆர் ரகுமானை தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து இந்த பதிவை செய்தாரா என்று பலவிதமான கேள்விகள் எழும்பி உள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் ஹிந்தி திணிப்பு பற்றி அதிகமாக பேச்சு வந்தபோது 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வசனம் பொருந்திய டீசர்ட் யுவன் சங்கர் ராஜாவின் மூலம் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக