செவ்வாய், 26 ஏப்ரல், 2022

இலங்கை அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பெருகும் ஆதரவு! ஆட்சியாளர்கள் பதவி இழக்கிறார்கள்

Rajkumar R  -   Oneindia Tamil News :  கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான உறுப்பினர்களை விட அதிக ஆதரவு இருப்பதாக கோத்தபய ராஜபக்சவால் நீக்கப்பட்ட இலங்கை அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன
மேலும் எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.
கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகைக்கு எதிரே முன்னெடுக்கப்பட்ட போராட்டம் திங்கட்கிழமையான இன்று பதினேழாவது நாளை எட்டியது. இதனிடையே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நிதி உதவிக்காக இலங்கை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ஆனாலும் இலங்கையின் ஜனாதிபதி முறைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சி முன்மொழிந்துள்ளது. இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உதவியாக 500 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் உதவியை எதிர்நோக்கி இலங்கை காத்துள்ளது.

இந்நிலையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற தேவையான 113 உறுப்பினர்களை விட அதிக ஆதரவை பெற்றுள்ளதாக, தனது விமர்சனக் கருத்துக்களுக்காக அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நீக்கப்பட்ட இலங்கை அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருந்த நிலையில், அவரது இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய நிதியமைச்சரும் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்சவை வெளிப்படையாக விமர்சித்தமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட எரிசக்தி அமைச்சர் பதவியை உதய கம்மன்பில, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பிரிந்து செல்வதாலும், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய , மார்க்சிஸ்ட் ஜனதா விக்முதி பெரமுன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடனும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கம்மன்பில கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக