சனி, 23 ஏப்ரல், 2022

‘தி கிரேட் டிக்டேட்டர்’ - சார்லி சாப்ளினின் முதல் பேசும் படத்தில் சர்வாதிகார ஹிட்லருக்கு எதிராக பேசிய த உரை ... இன்று மிகப்பொருத்தமானது

 Vijayasankar Ramachandran  :  ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்கிற சார்லி சாப்ளின் முதல் பேசும் படத்தில் இடம் பெறும் இந்த உரை காலத்தைக் கடந்து நிற்பது. இங்கும் பொருத்தப் பாடுடையது.
(தமிழில்: ஆர். விஜயசங்கர்)
மன்னிக்கவும், ஆனால் நான் பேரரசனாக நினைக்கவில்லை. அது என் வேலை அல்ல. நான் யாரையும் ஆட்சி செய்யவோ அல்லது வெல்லவோ நினைக்கவில்லை.
முடிந்தால் நான் அனைவருக்கும் உதவ நினைக்கிறேன் –
அது யூதர், ஜெண்டைல், கருப்பர், வெள்ளையர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நினைக்கிறோம்.
மனிதப் பிறவிகள் அப்படித்தான்.
நாம் ஒவ்வொருவரும் மற்றொருவரின் மகிழ்ச்சியினால் வாழ நினைக்கிறோம்,
துயரத்தினால் அல்ல. நாம் ஒருவரையொருவர் வெறுக்கவோ இகழவோ விரும்பவில்லை.


இந்த உலகத்தில் அனைவருக்கும் இடமிருக்கிறது. இந்த நல்ல பூமி செழிப்பானது, அனைவருக்கும் தேவையானதைக் கொடுக்க அதனால் முடியும். வாழ்க்கைப் பாதை சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும்; ஆனால் நாம் அந்தப் பாதையைத் தொலைத்து விட்டோம்.
பேராசை மனிதர்களின் ஆன்மாவில் விஷமாய் இறங்கி விட்டது; உலகை வெறுப்பு எனும் தடுப்புகளால் பிரித்து விட்டது. நம் கால்களை விறைப்பாக்கி நடக்க வைத்து துயரத்திலும் ரத்தச் சகதியிலும் தள்ளிவிட்டது.

வேகத்தை உருவாக்கிய நாம் முடங்கிப் போய் விட்டோம். பொருட்களை அள்ளி வழங்கும் எந்திரங்கள் நம்மை ஏழைகளாக்கி விட்டன. நம் அறிவு நம்மைப் பிறரின் மீது நம்பிக்கையற்றவர்களாக்கி விட்ட து. நமது புத்திசாலித்தனம் நம்மை இறுகிப் போனவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் ஆக்கி விட்டது. நாம் மிக அதிகமாகச் சிந்திக்கிறோம்; மிகக் குறைவாக உணர்கிறோம். எந்திரங்களை விட மனிதம்தான் நமக்கு அதிகமாகத் தேவைப் படுகிறது. புத்திசாலித் தனத்தை விட இரக்கமும் மென்மையும்தான் அதிகம் தேவைப் படுகிறது. இந்தக் குணங்கள் இல்லையெனில் வாழ்க்கை வன்முறையாகி விடும்; தொலைந்து போய் விடும்.
விமானமும் ரேடியோவும் நம்மை முன்பை விட அதிகமாக நெருக்கமாக்கி விட்டன.

இந்தக் கண்டுபிடிப்புகளின் தன்மையே மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், நம் அனைவரின் ஒற்றுமைக்கான கூக்குரல்தான். இப்போது கூட என் குரல் உலகெங்கிலுமுள்ள விரக்தியடைந்த ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அப்பாவிகளைச் சித்திரவதைச் செய்து, சிறைப்படுத்தும் ஒரு அமைப்பிகுப் பலியானவர்கள் இவர்கள்.

என் குரலைக் கேட்க முடிபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்: விரக்தி அடையாதீர்கள். நம் மீது வீழ்ந்திருக்கும் மனித குலத்தின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும், பேராசை பிடித்த மனிதர்களின் நிரந்தமற்ற உணர்வின் விளைவுதான் நம் மீது படிந்திருக்கும் இந்தத் துயரம். மனிதர்களின் வெறுப்பு கடந்து போய்விடும்; சர்வாதிகர்கள் இறப்பார்கள்; மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட அதிகாரம் மக்களுக்கே திரும்பி வரும். மனிதர்கள் இறக்கும் வரை  சுதந்திரம் அழியவே அழியாது….
ராணுவ வீரர்களே, உங்களை வெறுக்கும், அடிமையாக்கும், உங்கள் வாழ்க்கையை சட்டகத்துள் அடைக்கும், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும், என்ன உணர வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் விலங்குகளிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். உங்களுக்கும் கடும் பயிற்சி அளிக்கும், கட்டுப்பாடான உணவைக் கொடுக்கும், உங்களை கால்நடைகளைப் போலவும் பீரங்கிகளைன் தீவனம் போலவும் நடத்துபவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். இயற்கைக்கு மாறான, எந்திர மூளைகளையும் எந்திர இதயங்களையும் கொண்ட இந்த மனிதர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். நீங்கள் கால்நடையல்ல, நீங்கள் எந்திரங்கள் அல்ல, நீங்கள் மனிதர்கள். மனிதகுலத்தின் மீதான அன்பை உங்கள் இதயங்களில் சுமப்பவர்கள். நீங்கள் வெறுப்பதில்லை. அன்பைப் பெறாதவர்கள்தாம், இயற்கைக்கு மாறானவர்கள்தாம் பிறரை வெறுக்கிறார்கள். ராணுவ வீரர்களே, அடிமைத் தனத்திற்காகப் போராடாதீர்கள். விடுதலைக்காகப் போராடுங்கள்.  

லூக் எழுதிய சுவிசேஷத்தின் 17 அத்தியாயம் கூறுவது: ‘கடவுளின் பேரரசு மனிதனுக்குள் இருக்கிறது.’ அது சொல்வது ஒரு மனிதனை அல்ல; ஒரு மனிதக் குழுவையும் அல்ல. அது அனைத்து மனிதர்களையும் குறிப்பிடுகிறது. உங்களுக்குள் இருக்கிறது.  மக்களே உங்களுக்கு சக்தி இருக்கிறது _ எந்திரங்களை உருவாக்கும் சக்தி. மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தி. மக்களே உங்களுக்கு இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும், அழகானதாகவும், அற்புதமான சாகசமாகவும் ஆக்கும் சக்தி இருக்கிறது.
எனவே, ஜனநாயகத்தின் பேரில் அந்தச் சக்தியைப் பயன் படுத்துவோம்.

நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நாம் ஒரு கண்ணியமான உலகத்திற்காகப் போராடுவோம். மனிதர்களுக்கு உழைக்கும் வாய்ப்பினையும், இளைஞர்களுக்கு எதிர் காலத்தையும், முதியவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும் ஒரு கண்ணியமான உலகத்திற்காகப் போராடுவோம். இவையனைத்தையும் கொடுப்பதாகக் கூறி விலங்குகள் அதிகார நிலைக்கு உயர்ந்து விட்டனர். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள்; அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எப்போதும் அதைச் செய்யப் போவதில்லை.

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்; ஆனால் மக்களை அடிமைப் படுத்தி விடுகிறார்கள். நாம் இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராடுவோம். உலகை விடுதலை செய்யவும், தேசத் தடுப்புகளை அகற்றவும், பேராசையையும் வெறுப்பையும் சகிப்புத் தன்மையில்லாத நிலையை ஒழிக்கவும் போராடுவோம். பகுத்தறிவினாலான உலகத்திற்காகவும், அனைத்து மனிதர்களின் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அறிவியல் உலகத்திற்காகவும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்றிணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக