வியாழன், 7 ஏப்ரல், 2022

அதிபர் பதவியே வேண்டாம்! இலங்கையின் அஸ்திவாரத்தை ஆட்டும் மூவ்! என்ன நடக்குதுன்னு புரியலயா?

 Shyamsundar  -       Oneindia Tamil :  கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு ஆளுநர் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதனால் அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரதமர் மகிந்தாவின் ஆட்சி கவிழ்க்கப்படும்.
மக்கள் போராட்டத்தால் நடுங்கி போன ராஜபக்சே குடும்பம்!
இலங்கையில் என்ன நடந்தது?
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கையில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை.


தொடர்ந்து பாராளுமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் நீடித்து வருகின்றனர். இலங்கை அரசியலில் என்ன குழப்பம் நிலவி வருகிறது. இனி என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா?இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா?

இலங்கையில் அதிபர் - பிரதமர் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே. இதில் அதிபருக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. பிரதமர் என்பவர் அதிபரின் துணை என்ற அளவிலேயே அங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் நினைத்தால் பிரதமர் பதவி ஏற்ற 2 வருடம் 6 மாதம் கழித்து அவரை பதவி நீக்கம் செய்ய முடியும், பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பிரதமர் என்பவர் சட்டம் இயற்றும் தலைவர் மட்டுமே.. ஆனால் அதிபர் நினைத்தால் அந்த சட்டத்தையும் நீக்க முடியும்.


சரி இப்போது அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கூட்டணிக்கும் அங்கு பெரும்பான்மை இல்லை. இலங்கையில் ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பு என்ற கூட்டணிதான் ஆட்சி புரிந்து வருகிறது. ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுஜன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து அங்கு கூட்டணி ஆட்சி அமைத்தன. அங்கு ஆளும் கூட்டணிக்கு 145 இடங்கள் இருந்தன. மொத்த இடங்களில் எண்னிக்கை 225.

இந்த நிலையில் ஆளும் கூட்டணியில் இருந்து சுதந்திர கட்சி வெளியேறும் முடிவை எடுத்துவிட்டது. தொண்டமானின் சிலோன் தொழிலாளர்கள் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 40 எம்பிக்களை ஆளும் கூட்டணி இழக்கிறது. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கூட்டணிக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. இந்த நிலையில் அங்கு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அங்கு எதிர்க்கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறிய சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் மகிந்தாவின் ஆட்சி கவிழும். ஆனால் இப்படி நடக்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தை மொத்தமாக கலைத்து அதிபர் கோத்தபய தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும். இதுவும் பயன் இல்லாமல் போகும். இல்லையென்றால் அதிபரை நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கலாம். ஆனால் அவையில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் சேர்ந்து அதிபரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் அதற்கு கோர்ட் அனுமதிக்க வேண்டும். ஆனால் அதிபர் நினைத்தால் நீதிபதிகளை நீக்க வேண்டும் என்பதால் அதிபரை நீக்குவது அங்கு கடினம்.

1. பிரதமரை நீக்கினால் .. மொத்தமாக பாராளுமன்றத்தை கலைக்க அதிபர் முயல்வார். ஆனால் புதிதாக தேர்தல் நடத்த காசு இல்லை.

2. அதிபரை நீக்குவதிலும் சட்ட சிக்கல், நீதிமன்ற மோதல் உள்ளது.

இதனால் பிரதமரை நீக்குவதிலும் , அதிபரை நீக்குவதிலும் நிறைய பிரச்சனைகள் அங்குஉள்ளன . இதன் காரணமாகவே மொத்தமாக அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்று அங்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் அமைச்சர்கள் நியமிக்கும், நீக்கும், சட்டங்களை இயற்றும், மாற்றும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. இலங்கையின் அஸ்திவாரமே அதிபர் பதவிதான்.

இதை மொத்தமாக நீக்கிவிட்டு 1978க்கு முன் இருந்தது போல அதிபர் இல்லாத அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பிரதமரை முன்னிறுத்தும் ஆட்சி முறை எளிதானதாக இருக்கும். அதிபர் தனி சுதந்திரத்தோடு செயல்படுவதால்தான் அங்கு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட சட்டங்களை இயற்றுவதை ஏற்க முடியாது. அதனால் அந்த பதவியையே நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக