செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவதில் வடகிழக்கு மாநிலங்களின் போர்க்கொடி

 இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவதில்  வடகிழக்கு மாநிலங்களின் எதிர்ப்பு எப்படி உள்ளது?
 BBC -திலீப் குமார் ஷர்மா  -    பிபிசி இந்திக்காக குவஹாத்தியில் இருந்து   : :
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் யோசனையை முன்வைத்தார். ஆனால் அசாம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இந்தி மொழியை விருப்பப் பாடமாக வைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியை 'இந்தியாவின் மொழி' என்று வர்ணித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.


அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் அமித் ஷா உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் இந்தி கற்பிக்க 22 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கின் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளின் எழுத்துவடிவத்தை தேவநாகரிக்கு மாற்றியதையும் ஷா சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் பாஜக எந்த மாதிரியான அரசியலை நடத்தி வருகிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, சமீபத்திய அறிவிப்புகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 'இந்தி-இந்து-இந்துஸ்தான்' ஃபார்முலாவின் கீழ், வடகிழக்கு மாநில பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்தியாவை மாற்றும் முயற்சிகள் நடப்பதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளன. பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்குவது இங்குள்ள பள்ளி மாணவர்களின் சுமையை அதிகரிக்கும் என்றும், இந்தி பேசாதவர்கள் அம்மொழியை கற்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் விவாதிக்கப்படுகிறது.

வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு தனது பிரச்னையை அரசிடம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா தனது எதிர்ப்பை பிபிசியிடம் வெளிப்படுத்தினார். "இந்தியை கட்டாயமாக்குவதன் மூலம் எங்கள் தாய்மொழி மறைந்துவிடும். ஏனெனில் இந்தி எங்கள் தாய்மொழி அல்ல. மேகாலயா மற்றும் வடகிழக்கின் பிற மாநிலங்களில் இந்தி ஒரு விருப்பப் பாடமாகும். இந்தியை விருப்பப் பாடமாக வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இங்குள்ள மாணவர்கள் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் பேச்சு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல," என்று அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனு

இது தொடர்பாக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினாலும், அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய முடிவு எதையும் தற்போது மேற்கொள்ளவில்லை.

"தற்போது இந்தப் பிரச்சனைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இந்தச் சூழலில் உள்துறை அமைச்சருக்கு திங்கள்கிழமை மனு ஒன்றை அனுப்பியுள்ளோம். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 8 முக்கிய மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து உள்துறை அமைச்சரின் இந்த முன்மொழிவு தொடர்பான தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளன. இந்தியா 'ஒரே வகையில் அமைந்த' நாடு அல்ல என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.இங்கு (வடகிழக்கில்) இந்தி எந்த மாநிலத்திற்கும் தாய் மொழி அல்ல. உள்ளூர் மொழி தவிர, ஆங்கிலக் கல்வி இங்கு விருப்பமான கல்வி முறையாக உள்ளது," என்று சாமுவேல் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்குவது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த மேகாலயா முன்னாள் அமைச்சர் மாசல் அம்பரின் லிங்தோ, வடகிழக்கு மாநிலங்களின் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் முன்மொழிவு ஒருவகையில் குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

எப்படி இந்தியை கட்டாயமாக்கத் திட்டமிடுகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மாசல் அம்பரின் லிங்தோ, மேகாலயாவின் முன்னாள் கல்வி அமைச்சர்

"மேகாலயாவில் 8ம் வகுப்பு வரை மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயம் கற்கவேண்டும். எங்கள் உள்ளூர் மொழிகளை நீக்கி இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தால், அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பல ஆண்டுகளாக மேகாலயாவில் இந்தி ஆசிரியர்கள் குழு வேலை செய்கிறது. மேகாலயா அரசு குழந்தைகளுக்கு இந்தி கற்றுத்தருகிறது. இதற்குப் பிறகும் இந்திய அரசு இப்படி செய்யச் சொன்னால் அது பயத்தை உண்டாக்குகிறது. இங்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் இந்தியை கட்டாயமாக்கினால், எங்கள் தாய்மொழியின் கதி என்ன? இந்திய அரசின் ஆணை அமல்படுத்தப்பட்டால், இங்குள்ள முக்கிய மொழிகளான காசி, காரோ மொழிகளின் கதி என்னவாகும்,"என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"இந்த நாட்டில் மொழி மற்றும் மதத்தின் பெயரால் எந்தப் பிரிவினையையும் நாங்கள் விரும்பவில்லை. எங்கள் குழந்தைகளால் எங்கள் மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் அது மிகவும் ஆபத்தானது. எங்கள் மொழி அழிந்துவிடும். நான் இந்திக்கு எதிரானவள் அல்ல. நான் டெல்லியில் கல்வி கற்றேன். நான் ஓரளவு நன்றாக இந்தி பேசுகிறேன். என் மூன்று குழந்தைகளுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் எழுதவும் பேசவும் தெரியும். மேகாலயாவின் கிராமப்புற இளைஞர்கள்கூட இந்தி பாடல்களை விரும்பிக்கேட்கின்றனர். ஆனால் எங்கள் தாய்மொழிக்குப் பதிலாக இந்தியைக் கட்டாயமாக்குவதை ஏற்க முடியாது," என்று மாநிலத்தின் முன்னாள் கல்வி அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான அம்பரின் தெரிவித்தார்.
மொழி - ஒரு முக்கிய பிரச்சனை
வடகிழக்கு மக்களின் மொழி தொடர்பான பிரச்சனை எப்போதுமே மிகவும் உணர்வுப்பூர்வமானது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இதுபோன்ற மாற்றங்களின் மூலம் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பதாக, மேகாலயாவில் தி வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் கட்சியின் தலைவரான ஆர்டென்ட் மில்லர் பாசியாவ்மொய்ட் குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ பசியாவ்மொய்ட்,"மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் நாடாக இந்தியாவை மாற்ற முயற்சி செய்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

அசாமில் இருந்து மேகாலயா உருவானதற்கு மொழியே முக்கிய காரணம். அசாமி மொழிக்கு பதிலாக தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேகாலயா மக்கள் எழுப்பினர்.

அசாமின் பராக் பள்ளத்தாக்கில் உள்ள வங்காள மொழி இயக்கமும் அசாமிய மொழியை மாநிலத்தின் ஒரே அலுவல் மொழியாக்கும் அசாம் அரசின் முடிவுக்கு எதிராக இருந்தது. அந்த நேரத்தில், மொழி எதிர்ப்பு தொடர்பான முக்கிய சம்பவம் 1961, மே 19 ஆம் தேதி சில்சர் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் 11 வங்காளிகள் உயிரிழந்தனர்.

வைகுண்ட் நாத் கோஸ்வாமி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்
பாஜகவின் 'இந்தி-இந்து-இந்துஸ்தான்' ஃபார்முலா

"யாராவது இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் தன் தேவைக்காகக் கற்றுக் கொண்டால், அதில் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. இங்குள்ள பள்ளிகளில் பல ஆண்டுகளாக இந்தி விருப்ப மொழியாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இங்குள்ள மக்கள் மீது இந்தியைத் திணிக்க முயல்வது போல் தெரிகிறது. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தி- இந்து-இந்துஸ்தான் ஃபார்முலாவின் முதல் அறிகுறி தெரிகிறது," என்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் வைகுண்ட் நாத் கோஸ்வாமி கூறுகிறார்.

பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இந்த நேரத்தில் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிக்க பாஜக முயற்சி செய்வதற்கு என்ன காரணம் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

"எதோ ஒரு வகையில் அசாம் மாநில சூழலை கொந்தளிப்பாக வைக்கும் முயற்சி இது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை. பணவீக்கம்-வேலையின்மை போன்ற பிரச்சனைகளில் மக்கள் இப்போது கேள்விகள். எழுப்பத்தொடங்கியுள்ளனர். எனவே இந்த முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மொழிப் பிரச்சனை இப்போது எழுப்பப்பட்டுள்ளது,"என்றார் அவர்.
அசோம் ஜாதிய பரிஷத் தலைவர் லூரின் ஜோதி கோகோய்

அசாமின் உச்ச இலக்கிய அமைப்பான அசாம் சாகித்ய சபாவும், மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "இந்தியைத் திணிப்பதற்கு பதிலாக அசாம் மற்றும் பிற பழங்குடி மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அசாமி மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் எல்லா பூர்வீக மொழிகளுக்கும் இருண்ட எதிர்காலத்தின் அறிகுறியாகும். 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சாகித்ய சபை கோருகிறது."என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட பிராந்திய கட்சியான அசோம் ஜாதிய பரிஷத்தின் தலைவர் லூரின் ஜோதி கோகோய், மத்திய அரசின் இந்த முன்மொழிவு துரதிர்ஷ்டவசமானது என்று விவரித்தார்.

"அசாமி மற்றும் பிற இன மொழிகள் நெருக்கடியில் இருப்பதாக பல மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகள் கூறும்போது, எங்கள் மொழியை வளர்ப்பதற்கு பதிலாக, இந்தியை திணிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. உண்மையில், வடகிழக்கு மக்கள், அவர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் தொடர்பாகதான் அதிக அக்கறைகொண்டுள்ளதாக பாஜக கூறுவதற்கு எதிராக இது உள்ளது. அத்தகைய முன்மொழிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வடகிழக்கு பூர்வகுடி மக்களிடமிருந்து தாய்மொழியைப் பறிக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது,"என்று அவர் கூறினார்.
அசாம் பாஜக மூத்த தலைவர் விஜய் குப்தா

ஆனால், அசாம் பிரதேச பாஜக மூத்த தலைவரும், அசாம் நிதிக் கழகத்தின் தலைவருமான விஜய் குப்தா, இந்தி-இந்து-இந்துஸ்தான் என்று கூறப்படுவது தொடர்பாக பதிலளித்தார்.

"மொழி மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். அதில் ஒருபோதும் அரசியல் இருக்கக் கூடாது. வேறு எந்த மொழியுடனும், எந்த ஒப்பீடும் செய்யப்படக்கூடாது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் உள்ளூர் மொழியை மேலும் வளப்படுத்த எங்கள் அரசு கொள்கைகளை வகுத்துள்ளது,"என்று அவர் குறிப்பிட்டார்.

"ஆனால் இன்றைய சூழலில் நாம் அனைவரும் நம் தேவைக்காக இந்தி கற்றுக்கொள்கிறோம். இந்தி அலுவல் மொழியும் கூட. சமூக ஊடகங்கள் முதல் பிற தளங்கள் வரை, இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் ஆங்கிலம் பேசுகிறார்கள். இதில் எந்த வகையிலும் அரசியல் தேவையில்லை. யாருக்கு என்ன விருப்பமோ அந்த மொழியில் கற்கலாம். இந்தி யார் மீதும் திணிக்கப்படாது. எனவே இந்தி-இந்து-இந்துஸ்தான் என்று இணைத்து இதைப் பார்ப்பவர்கள் தேவையில்லாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்,"என்று சொன்னார் அவர்.

உண்மையில், அசாம் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களில் 'மூன்று மொழி ஃபார்முலா' பின்பற்றப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம் தவிர்த்து 8ஆம் வகுப்பு வரை இங்கு இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. அதேசமயம் அருணாச்சல பிரதேசத்தில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழியாக உள்ளது. திரிபுராவில் எந்த வகுப்புக்கும் இந்தி கட்டாயம் இல்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல பழங்குடி குழுக்கள் ஒவ்வொன்றும் தன் சொந்த மொழியைக் கொண்டுள்ளன. எனவே இந்தி அங்கு தொடர்பு மொழியாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் 26 பழங்குடியினர் மற்றும் 256 துணை பழங்குடியினர் உள்ளனர். இந்தி அங்கு பிரபலமடைய இந்த பன்முகத்தன்மை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் விளக்கம்.

இருப்பினும், இந்தியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசிடம் இருந்து இதுவரை மாநில அரசுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகிறார்.

"அசாமின் தாய்மொழியும் பயிற்றுமொழியும் அசாமிதான். 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை வழங்க வேண்டும் என்று அமித் ஷா சொன்னார். மக்கள் தங்கள் தாய்மொழி கல்வியை கைவிட வேண்டும் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரையில் பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை பரிந்துரைக்கிறது,"என்று அவர் குறிப்பிட்டார்.

அசாம் சாகித்ய சபா மற்றும் பிற ஆதிவாசி சாகித்ய சபைகளுடன் கலந்தாலோசித்து, அசாம் அரசு 'நான்கு மொழிக் கொள்கையை' தயாரித்துள்ளதாக முதல்வர் ஷர்மா தகவல் அளித்தார். இந்தக் கொள்கையின் கீழ், அசாமி மற்றும் பிற உள்ளூர் மொழிகள் முக்கியத்துவம் பெறும். ஆனால், போடோ சாகித்ய சபையின் சில ஆட்சேபங்களால் இந்த மொழிக் கொள்கை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒருமுறை அசாம் சட்டப் பேரவையில் அரேபிய மொழியைக் கற்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதம் நடந்ததாக முதல்வர் கூறினார். அந்த நேரத்தில் அது தொடர்பாக எந்த சர்ச்சையும் இருக்கவில்லை. ஆனால் அமித் ஷாவின் இந்தி மொழியை கற்கும் யோசனை ஒரு தேவையற்ற சர்ச்சையாக மாறியுள்ளது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக