ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

மின்சார விநியோகம் சீரானது! இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி. தமிழக அரசு அதிரடி

 கலைஞர் செய்திகள் : "முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது." என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை மாலை ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய 296 மெகாவாட் மின்சாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. மின்பற்றாக்குறையைச் சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் டன் 137 டாலர் என்ற விலையுடன் ஜி.எஸ்.டி சேர்த்து 143 டாலர் என்ற விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த மின் உற்பத்தியை 37 விழுக்காடு அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்தடை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஒன்றிய அரசு குறைந்தளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் 5 சதவீதம் கூட மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் 68 முறை இதே சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை முதல் மின்சார விநியோகம் சீராக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக