சனி, 2 ஏப்ரல், 2022

இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் நீட்டும் உதவிக்கரம்

 

இராதா மனோகர் : தமிழ்நாடு முதலமைச்சர் திரு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
இலங்கையில் பொருளாதார சிக்கல்களால் இன்னல் படும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒன்றிய அரசின் அனுமதியை கோரி இந்திய பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களிடம் தாங்கள்  கோரிக்கை விடுத்திருப்பதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இலங்கையின் தற்போதைய பொருளாதார இன்னல்கள் வெறுமனே தமிழர்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
இலங்கையின் மொத்த மக்களுமே இன்று பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்ததே.
இந்த இன்னல் காலங்களில் இலங்கை மக்களை சிங்களவர் தமிழர் என்று பிரித்து உதவி கோருவது அங்குள்ள மக்களுடையே  தேவையற்ற ஒரு கசப்புணர்வை மீண்டும் பரப்பி விடக்கூடும் என்ற அச்சம் உண்டாகிறது

ஏற்கனவே தமிழ்நாட்டின் எட்டுகோடி தமிழர்களின் தொகையானது அங்குள்ள சிங்கள மக்களுக்கு  ஒரு நிரந்தர அச்சத்தை அளித்துக்கொண்டிருப்பது இரகசியம் அல்ல.
மேலும் கடந்த கால இனவெறுப்பு கசப்புக்களை மறந்து தற்போது அங்கு இனரீதியான ஒரு நட்பு நிலவுகிறது
வடக்கு கிழக்கை விட இலங்கையின் தலைநகரத்தை அண்டிய பகுதிகளிலும் மலையகம் போன்ற தென்னிலங்கையில் உள்ள தமிழர்களின் தொகை அதிகம் என்ற கருத்தும் உள்ளது.

மேலும்அந்தந்த பகுதிகளில் உள்ள மாகாண அரசுகளில் தமிழர்கள் ஓரளவு அதிகாரத்தில் பங்குகொள்ளும் நிலைமையும் தற்போது உருவாகி உள்ளது.

குறிப்பாக மலையக மக்கள் சிங்களவர் தமிழர் என்ற பேதமில்லாமல் அதிகார பரவலாக்கத்தில் சேர்ந்தே பயணிக்கிறார்கள்

இன்னும் சரியாக சொல்லப்போனால் அப்பகுதிகளில் வாழும் பலர் சிங்களவர்களா தமிழர்களா இன்று இனம் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரு மொழிவளமும் பெற்று சகல துறைகளிலும் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார்கள்

இந்த நிலைமையில் மீண்டும் ஒரு சமூக முறுகல் நிலை உண்டாவது போரால் அழிந்து மீண்டு கொண்டிருக்கும் மக்களுக்கு நன்மை பயக்காது.

காலத்தின் தேவையறிந்து உடனே உதவிக்கரம் நீட்டும் தங்களின் நல்லெண்ணத்தை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நன்றியோடு இருப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்.

இன்னும் ஒரு முக்கியாமான கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்
தமிழகத்தில் இருந்து பௌத்தர்கள் துரத்தி அடிக்கப்பட்டபோது இலங்கை சென்று பௌத்தத்தை தக்கவைத்து கொண்டவர்கள்தான் இன்று இலங்கையில் இருக்கும் பௌத்தர்கள்
அந்த பௌத்தத்தை காப்பதற்கு அவர்கள் உருவாக்கிய மொழிதான் சிங்கள மொழியாகும்

அவர்களும் நம்மவர்கள்தான் . அவர்களும் திராவிடர்கள்தான்
வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு இந்த கருத்துக்களை கூறும் வாய்ப்பு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக