திங்கள், 18 ஏப்ரல், 2022

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு?

 நக்கீரன் செய்திப்பிரிவு :  நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்திருந்தது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தற்போது வரை ஆளுநர் பதிலளிக்காததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதேநேரத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்றன.


அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 11 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
 இந்நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்து இருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சிறப்புப் பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக