புதன், 27 ஏப்ரல், 2022

உக்கிரேன் - ரஷ்யா! மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்காமல் உலக மக்களுக்கு ஏன் கோரிக்கை வைக்கிறார்கள்?

May be an image of map and text that says 'SCI NO WAR IN UKRAINE! NO WAR ANYWHERE!'
சுமதி விஜயகுமார்  :  அம்மா கேட்ட போது கூட போர் சீக்கிரமே முடிந்து விடும் என்று தான் கூறி இருந்தேன். ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தத்தான் போரை துவங்கியது. ரஷ்யா , சீனா , அமெரிக்கா, வடகொரியா நாடுகளிடம் இருக்கும் அணுஆய்தங்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ,பூமி என்ற ஒரு கிரகமே இருக்காது என்பது உலகறிந்த உண்மை.
அதனால் அனைத்து நாடுகளும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அடங்கிவிடும் என்றே கருதி இருந்தேன். இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறதே அல்லாமல் தீர்க்கப்படுவதாய் தெரியவில்லை.
ரஷ்யா உக்ரைன் பொது மக்கள் மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள்/போர் குற்றங்கள் வெளியாகி கொண்டே இருக்கும் வேளையில்,
உக்ரைனின் போர் குற்றங்களும் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இரண்டுக்குமான எண்ணிக்கையில் மட்டுமே வேறுபாடு.
குழந்தைகளும் , முதியவர்களும், வளர்ப்பு பிராணிகளும் கால் கடுக்க நடந்து செல்லும் காட்சிகளும், குடிக்கக்கூட நீர் இல்லாமல் , எங்கே செல்வது என்றும் தெரியாமல் , இன்னும் லட்சக்கணக்கான மக்கள் போர்க்களத்தில் , சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த போரில் இதுவரை எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கிறது என்னும் கணக்கை விட, போர் என்பதே மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அனைத்து உலக நாடுகளும் அறிவிக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மரிப்போலில் எக்கு ஆலையில் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நிகழ்த்திய போது ,
அதன் உள்ளிருந்த மக்கள் உலக மக்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களை காப்பாற்ற கோரிக்கை விடுத்தார்கள். அது ஏன் எந்த அரசிற்கும் வேண்டுதல் வைக்காமல் மக்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கோரிக்கை வைத்தார்கள் !
தனக்கு அடுத்து கீழிருக்கும்  9 நாடுகளின் ராணுவ செலவுகளை விட அதிக அளவு ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கிறது. அது ஒதுக்கிய பங்கில் 2.5 பங்கு தான் உலக தாதாவாக துடிக்கும் சீனா கூட  ஒதுக்கி இருக்கிறது. 2021ல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராணுவத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த நாடு இப்போது போரிட்டு கொண்டிருக்கும் ரஷ்யா அல்ல . அமெரிக்கா. 13.6 பில்லியன் அமெரிக்கா டாலர்களை உக்ரைனுக்கு ஆயுதங்களாக வழங்கி இருக்கிறது அமெரிக்க அரசு. அது அதிகார பூர்வ அறிவிப்பு தான். உண்மையில் எவ்வளவு என்பது அமெரிக்க ஏகாதிபதியத்திற்கே வெளிச்சம். போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துங்கள். அது தோல்வி அடைந்தால் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள். அதுவும் தோல்வி அடைந்தால் , மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அறைகூவி கொண்டிருக்கிறார்கள்.
ரஷ்யா அதிபர் புடினை சர்வாதிகாரியாகவும், ஜோக்கராகவும் , திமிர்ப்பிடித்தவனாகவும் காட்டும் அமெரிக்க ஊடகங்கள் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியை ஹீரோவாக சித்தரித்து வருகிறார்கள். பேச்சு வார்த்தையில் சுமூகம் காணலாம் என்று அவர் சொன்னதை சொன்னதை , பொது மக்கள் கேட்காத  அளவிற்கு பின்னுக்கு தள்ளி, அவரை உலகையே காக்க வந்த மீட்பர் போல திட்டமிட்ட தோற்றத்தை உருவாக படுத்தி கொண்டிருக்கிறது.
ரஷ்யா உக்ரைனுக்கான மோதல்கள் ஒரு பெரிய வரலாறாக இருந்த போதிலும் , அந்த வன்மம் பெரும் தீயாய் மாறியது உக்ரைன் Nato வில் இணைய முடிவெடுத்த போதுதான். அமெரிக்கா, ரஷ்யாவிற்கு செய்து கொடுத்த வாக்குறுதியை மீறி ரஷ்யா சிவப்பு எல்லை விதித்திருந்த எல்லையில் தான் அமெரிக்கா தன் ராணுவத்தை கொண்டு வந்து நிறுத்த முயற்சிக்கிறது.  
உக்ரைன் இறையாண்மை உள்ள நாடு அதற்கு ரஷ்யா தடை விதிக்க முடியாது என்று கூறும் அமெரிக்கா, அதே இறையாண்மையை கடைபிடிக்க மறுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு 3000 kms அருகில் இருக்கும் Solomon தீவில் சீனா தன் ராணுவத்தலத்தை அமைக்க முயல்வதாக  அமெரிக்கா அஞ்சுகிறது. அப்படி சீனா ராணுவ தளத்தை அமைக்கும் பட்சத்தில் சோலோமோன் தீவு மிக பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என்று  இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா எச்சரித்து உள்ளது. அமெரிக்காவிற்கு வந்தால்தான் அது ரத்தம் . ரஷ்யாவிற்கு வந்தால் தக்காளி சட்னி.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவிற்கு இணையாக குரல் கொடுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் போர் துவங்கிய சில வாரங்களில் சவூதி அரேபிய மன்னரை சந்திக்க சென்றார். ரஷ்யாவின் எரிபொருளுக்கு மாற்றாக  சவூதி இன்னும் அதிகமான எண்ணெய் உற்பத்தியில் ஈடு பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே நேரில் சென்றார்.
இதில் தவறேதும் இல்லை தான். ஆனால் என்ன , போரிஸ் சென்ற ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சவூதி மன்னர் தன் குடிமக்களில் 82 பேரை சந்தேகத்தின் பெயரில் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை விதித்து கொன்று குவித்திருந்தார்.
 அமெரிக்கா எதிரிக்காத வரை எத்தனை மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும் பிரித்தானிய அரசிற்கு கவலையில்லை. கடந்த 8 ஆண்டுகளாக ஏமன் நாட்டில் சவூதி அரசு செய்து வரும் அட்டூழியங்களை பற்றி ஒருநாளும் அமெரிக்க அரசு வாய்திறந்ததில்லை. உக்ரைன் - ரஷ்யா போரால் எமெனில் ஒரு கோடி குழந்தைகள் பசியால் இறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் , முதலில் ரஷ்யாவை கண்டிக்க வேண்டும்.
இப்போது உக்ரைன் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்காமல் உலக மக்களுக்கு ஏன் கோரிக்கை வைக்கிறார்கள் என்று புரிந்திருக்கும். மக்கள் மட்டுமே போரை நிறுத்த முடியும். அதை தான் ரஷ்ய மக்கள் தங்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மக்களால் மட்டுமே போர்களை நிறுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக