வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அமித் ஷாவின் இந்தி - இந்தியாவின் ஒருமை பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.
வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. தலைமைத் தொடர்ந்து செய்கிறது.

'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக