சனி, 23 ஏப்ரல், 2022

ஆந்திரா அரசு மருத்துவமனையில் இளம்பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரம்

 மாலைமலர் : இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆஸ்பத்திரி காவலாளிகள் 3 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:   ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
விஜயவாடா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இளம்பெண் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அங்குள்ள லிப்ட் அருகே ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் 3 காவலர்கள் இருந்தனர்.


இளம்பெண்ணிடம் நைசாக பேசி லிப்ட் அருகே உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரும் மது அருந்திவிட்டு இளம்பெண்ணை 30 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரது பெற்றோர் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் இளம்பெண் செல்போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் இளம்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து விஜயவாடா போலீசில் புகார் செய்தனர். உங்களது மகளுக்கு மனநிலை சரியில்லாததால் அவர் வேறு எங்காவது சென்று இருப்பார்.

நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என போலீசார் அலட்சியமாக தெரிவித்தனர். அப்போது அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடித்து தாருங்கள் என கூறினர். அதற்கும் போலீசார் அலட்சியமாக பதில் அளித்தனர்.

இந்த நிலையில் காவலர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் லிப்ட் அருகே ஆடைகள் கிழிந்த நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இளம்பெண்ணை மீட்டு அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு வந்து இளம்பெண்ணிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வழங்கினார்.

ஜெகன்மோகன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது.

மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதலமைச்சர் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரஜினி, உள்துறை அமைச்சர் வனிதா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் சிகிச்சை செலவுக்காக ரூ.10 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆஸ்பத்திரி காவலாளிகள் 3 பேரை கைது செய்தனர்.

மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் மீது அலட்சியமாக நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக