திங்கள், 4 ஏப்ரல், 2022

திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா (சுதந்திரன் - 1954 ஒக்டோபர் 10 ) எஸ் டி சிவநாயகம்

சுதந்திரன் (இலங்கை) - 1954 ஒக்டோபர் 10 திராவிட முன்னேற்ற கழகத்தின்

எதிர்கால பொதுச்செயலாளர். திரு இரா நெடுஞ்செழியன் இலங்கை விஜயம் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றுவார் திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால பொதுச்செயலாளரும் மன்றம் மாதமிருமுறை இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு இரா.நெடுஞ்செழியன் எம் ஏ இம்மாதம் 14 ஆம் தேதி கொழும்பு வருகிறார்
சுமார் பத்து தினங்கள் இலங்கையில் தங்கும் நெடுஞ்செழியன் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில்
முத்தமிழ் , இலக்கிய இன்பம் , புரட்சி கவிஞர் என்ற மூன்று தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் என்றும்.


கொழும்பு திராவிட முன்னேற்ற கழக ஆதரவில் மருதானை கிண்னெர்ஸ் ரோட் அரசினர் பாடசாலை மண்டபத்தில் 24 ஆம் தேதி ஒரு இயக்க சொற்பொழிவாற்றுவர் என்றும் தெரிகிறது.
கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழா வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் இம்மாதம் 15. 16 . 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.

திரு நெடுஞ்செழியன் இலங்கையில் நிற்கும் காலை இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்று பிரயாணம் செய்து இடங்களையும் திமுகவின் வளர்ச்சியையும் பார்வையிடுவார்.

சுதந்திரன் ஆசிரியர் திரு எஸ் டி சிவநாயகம் கடந்த ஆவணி மாதத்தில் சென்னை சென்றிருந்த போது அறிஞர் அண்ணாதுரை திரு நெடுஞ்செழியனை அறிமுகம் செய்து வைக்கையில் நெடுஞ்செழியன் திமுகவின் எதிர்கால பொதுச்செயலாளர் . அநேகமாக அடுத்த ஆண்டு தெரிவுசெய்யப்படுகிறார் என்றார்.



அப்போது நெடுஞ்செழியன் அடக்கமாக அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்ல முற்படுகையில் அண்ணா குறுக்கிட்டு நெடுஞ்செழியன் திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் என்பதை
தமிழ்நாடு பத்திரிகைகளை முந்தி கொண்டு சுதந்திரன் ஒரு விசேச செய்தியாக வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

இது விஷயமாக  அண்ணா பேசும்பொழுது அண்ணாவுக்காக கட்சி இருக்கக்கூடாது கட்சிக்காகவே தலைவர்கள் இருக்கவேண்டும்.
ஒருவரே தொடர்ந்து பதவிகளை முற்றுகை இட்டு கொண்டு இருப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
ஒரு கட்சி ஸ்திரமாக நிலைத்து வளர்ச்சி அடையவேண்டும் என்றால் பொறுப்பான பதவிகளை சுமப்பதற்கு பலரும் பயிற்சி அடையவேண்டும்

இதற்கு முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் விட்டு கொடுத்து மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும்
இந்த அடிப்படையில் அடுத்த ஆண்டு திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை நான் துறப்பதென்றும் அதற்கு நெடுஞ்செழியனை நியமிப்பதென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்

இம்முடிவு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றதும் திரு நெடுஞ்செழியன் திமுகவின் பொதுச்செயலாளராவர்.
அதற்கப்புறம்தான் எனக்கு சற்று ஒய்வு ஏற்படும்.
அப்போது இலங்கை மலாயா போன்ற இடங்களில் சுற்று பிரயாணம்  செய்யவும்,
வசதி ஏற்பட்டால் இங்கிலாந்து  ஐரோப்பா ருஷ்யா முதலிய மேல் நாடுகளுக்கு நான் போய்வரவும்திட்டமிட்டு இருக்கிறேன்.

அநேகமாக அடுத்த ஜனவரியில் நான் இலங்கைக்கு வருவேன்.
திரு அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுபட்டு திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா ஒன்றை அமைத்து

அடுத்த பொதுத்தேர்தலில் திமுக பங்குபற்றுவதை பற்றி ஆராய்ந்து வேண்டிய செயல்திட்டங்களையும் பிரசார திட்டங்களையும் வகுக்க இருக்கிறார் என்று விஷயமறிந்த வட்டாரங்கள்  பேசிக்கொள்வதாக தெரிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக