புதன், 30 மார்ச், 2022

அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!

 மின்னம்பலம் :சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எதற்காக முதல்வர் குடும்பத்தினர் தொடர்ச்சியாக துபாய் செல்கிறார்கள். 5000 கோடி பணத்துடன் துபாய் சென்ற மர்மம் என்ன என்று பேசியிருந்தேன். அதுபோன்று சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் கண்டன போராட்டத்தில், முதல்வர் துபாய் போய் இருக்கிறார். போகும்போது நிறைய நிதி எல்லாம் கூட்டிட்டு போகப் போகிறார். அது தமிழ்நாட்டுக்கு வரப் போகிற நிதியா, கோபாலபுரத்து நிதியா அல்லது அவருடைய சொந்தத்துக்கான நிதியா என்பது தெரியவில்லை என்று பேசியிருந்தேன்.



இதன் பின்பு, துபாய் நாட்டில் ரூ.6 ஆயிரத்து 100 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாக முதல்வர் கூறி உள்ளார். இதில் 70 சதவிகிதம் துபாயில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் யூசுப் அலி முதலீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 100 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து கொள்கிறேன். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில், நான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கியதாகச் சொல்லியிருந்தார். அதுபோல நான் செய்யவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் கைது செய்யட்டும். நான் இன்னும் ஆறு மணி நேரம் பாஜக அலுவலகத்தில் இருப்பேன். அவர்களிடம் உண்மையான ஆதாரம் இருக்கு என்றால் என்னை கைது செய்யுங்கள். இப்போது மணி 12.15. இன்னும் ஆறு மணி நேரத்தில் அதாவது 6.15 மணி வரை நேரம் இருக்கிறது. முடிந்தால் முழு போலீஸ் படையுடன் வந்து என்னை கைது செய்யுங்கள்.

நான் சுயமாக விவசாயம் செய்து, உழைத்து தனி ஒருவனாய் உருவாகியிருக்கிறேன். ஆர்.எஸ்.பாரதி போல இல்லை. திமுக கட்சியில் இருக்கும் செயலர் போல எந்த குடும்பத்துக்கும் கப்பம் கட்ட நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழக மக்களின் நலன் என்ற ஒற்றை நோக்கத்தோடு தனி ஆளாக அரசியலுக்கு வந்துள்ளோம். உங்களைப் போல குடும்ப பின்னணி, பாரம்பரியம் எல்லாம் எனக்கு இல்லை. என் மீது அவதூறு வழக்கு தொடரவோ, டிஃபர்மேசன் நோட்டீஸ் கொடுப்பதற்குக்கூட திமுகவுக்கு தகுதி இல்லை. 6 மணி நேரத்தில் நீங்கள் கைது செய்யவில்லை என்றால், தமிழக மக்கள் நீங்கள் சொல்வதை இனி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஆளுங்கட்சி. ஆதாரங்களுடன் பேசுங்கள்.

பத்திரிகைகள் நான் பேசுவதை அதிகமாக எழுதுவார்கள். ஆனால் அதை பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளாது. அதை பத்திரிகை சுதந்திரம் என்பீர்கள். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லவே இல்லை. பாஜக மாநிலத் தலைவர் பதவி காலம் முடியும் வரை 1000 அவதூறு வழக்கைக் கூட சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தொட்டாம்பட்டியில் இருந்து கோபாலபுரத்தை எதிர்க்க வந்த விவசாயிதான் நான். நீங்கள் என்னை கைது செய்யாவிடில் மக்களிடம் மாட்டிக்கொள்வீர்கள். பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் என்னிடம் 500 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுபோல் முதல்வரின் துபாய் பணம் குறித்து நான் பேசியதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ரூ 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது போதாதது என்று எம்.பி வில்சன் என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் மற்றும் இரண்டு டப்பாதான் இருக்கின்றன. என்னிடம் ரூ.610 கோடி இல்லை. நான் ரூ.610 கோடிக்கு வொர்த் இல்லை.

தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டுப் பார்க்கட்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “துபாய்க்கு உங்கள் குடும்பத்துடன் பிப்ரவரி 2ஆம் தேதி சிறப்பு விமானத்தில் போனதற்கு ஆதாரம் இருக்கிறது. உங்கள் குடும்பத்துடன் உங்களது தனிப்பட்ட ஆடிட்டரும் சென்றிருக்கிறார். அங்கே சென்றதும் உங்களது குடும்பத்தினர் யூசுப் அலியை பார்த்துள்ளனர். அதன்பின்பு முதல்வர் துபாய் பயணத்தில் 6,100 கோடியில் 60 முதல் 70 சதவிகிதம் முதலீடு செய்தது யூசுப் அலி. இதைப் பார்க்கும்போது அனைவருக்குமே கேள்வி எழும். நிதி அமைச்சருக்கு தான் அனைத்தும் தெரியும். ஆனால், முதல்வரின் துபாய் பயணத்தில் நிதி அமைச்சர் பங்கு பெறவில்லை. முதல்வரின் மருமகன் சபரீசன் தான் அவரை வரவேற்றார். 8 மாதமாக நடைபெற்றுவரும் துபாய் எக்ஸ்போவில் கடைசி வாரத்தின்போது தமிழகத்தின் அரங்கை திறந்து வைத்தது ஏன்? அவர்களின் மடியில் கனம் உள்ளது. அதை மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள்.

அதுபோன்று எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்துக்காக ரூபாய் 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் முறைகேடாக ரூபாய் 4,472 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. பிஜிஆர் உடனான ஒப்பந்தம் மூலம் நஷ்டம்தான் வரும் என்று Tangedco கூறிய பிறகும் முதல்வர் Tangedcovஐ கட்டாயப்படுத்துவது ஏன். இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஆர்.எஸ்.பாரதி, “70 ஆண்டுக்காலம் பாரம்பரியமிக்க எங்கள் கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய காரணத்தினால், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் நோட்டீஸ் அனுப்பினேன். இது கூட புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால், எப்படி அவர் காவல் துறை அதிகாரியாக இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.

இன்றைக்கு சொல்கிறார், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்; கமலாலயத்தில் ஆறு மணி நேரம் நான் உட்காரப் போகிறேன். இது எப்படி என்றால், சினிமாவில் வடிவேல் நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்று வண்டியில் ஏறின மாறி, அண்ணாமலை கமலாலயத்தில் போய் உட்கார்ந்துகொண்டு என்னை கைது செய்யுங்கள் என்று சொல்கிறார். ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.

தனக்கு 4 மாடு 4 ஆடுதான் வைத்திருக்கிறேன் என்கிறார். 4 மாடு வைத்து அவர் பிழைத்துக்கொண்டு போகட்டும். அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், பேசுவது பொறுப்போடு பேச வேண்டும். அதற்காகத்தான் நோட்டீஸ் கொடுத்தோம். எனக்கு அறிவில்லை என்கிறார். மூத்த வழக்கறிஞர் வில்சனைப் பற்றி பிஜிஆர் கம்பெனிக்கு அவர் ஆஜரானார் என்பதை பெரிய குற்றமாகச் சொல்கிறார். எனக்கு அறிவிருக்கிறதா, வில்சனுக்கு அறிவிருக்கிறதா என்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வில்சனுடைய அறிவாற்றல்தான் இந்தியா பூராவும் 27 சதவிகிதம் ஓபிசி இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அவருடைய வாதத் திறமையால் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருடைய ஆற்றல், அறிவு பற்றி அண்ணாமலை சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அண்ணாமலை ஜெயிலுக்குப் போக வேண்டும் என முடிவு பண்ணிவிட்டார். அப்படி அவர் முடிவு பண்ணி இருக்கிறார் என்றால், அதற்கு உரிய நேரம் வரும் அனுப்பி வைப்போம். சூழ்நிலை ஏற்படுகிறபோது நிச்சயமாக அவர் குற்றம் உறுதி செய்யப்பட்டு உள்ளே செல்வார்” என்று தெரிவித்தார்.

-வினிதா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக