ஞாயிறு, 6 மார்ச், 2022

விசிக + பாமக கூட்டணி .. திமுக தொண்டர்கள் முறையீடு ..

சிறுத்தைகள் - பாமக கூட்டணி? திமுக புகார்!
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தலில் பங்கேற்றனர்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுகவுக்கு உள்ளேயும் திமுக கூட்டணிக்கு உள்ளேயும் கடுமையான போட்டி நிலவியதால் திமுக தலைமையே இந்தப் பதவிக்கு இன்னார் என்பதை மாவட்டச் செயலாளர்களோடு ஆலோசித்து முடிவு செய்து அறிவித்துவிட்டது. பின்னணியில் மார்ச் 4ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் அதன்படியே சுமுகமாக நடைபெற்ற நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டனர்.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் இதுபோல் திமுகவினர் நடந்துகொண்டதால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மார்ச் 4ஆம் தேதி மாலை தனது ட்விட்டர் வழியாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

"மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்பதுதான் திருமாவளவன் வேண்டுகோள்.

சில மணி நேரங்களிலேயே இதை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பி.மல்லாபுரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களில் 10 பேர் திமுகவினர். இரண்டு பேர் விடுதலைச் சிறுத்தைகள். மூன்று பேர் பாமகவினர்.

திமுக தலைமை விடுத்திருந்த அறிவிப்பில் இந்தப் பேரூராட்சி தலைவர் பதவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சின்னவேடி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் நடந்த நிலையில் மொத்தமுள்ள 15 வாக்குகளில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் வெறும் 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். திடீரென போட்டியிட்ட திமுகவின் கவுன்சிலர் சாந்தி புஷ்பராஜ் 8 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவர் ஆனார்.

இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தான் இதற்குக் காரணம் என்ன விடுதலைச் சிறுத்தைகள் குற்றம்சாட்டினார்கள்.

இந்தப் பேரூராட்சியில் நடந்தது பற்றி திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

"எங்கள் கூட்டணி முடிவுப்படி பேரூராட்சி தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகளுக்கும் துணைத்தலைவர் பதவி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் விடுதலைச் சிறுத்தைகளுடன் பாமகவின் மூன்று கவுன்சிலர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது திமுகவில் இருக்கும் வன்னியர் சமூக கவுன்சிலர்களைப் பேசி சரிக்கட்டி சேர்மன், துணை சேர்மன் இரண்டையும் நாமே வைத்துக் கொள்ளலாம் எனப்

பேசி முடித்திருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் திமுகவே பேரூராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்து அதை கைப்பற்றியது.

வெளியே பாமகவுக்கு எதிராக அரசியல் செய்யும் திருமாவளவன் தனது கட்சியினரே பாமகவோடு மறைமுகக் கூட்டணி போட்டுக் கொண்டதை மறைக்கவே இதுபோல கருத்து வெளியிட்டு இருக்கிறார். தலைவர் உத்தரவுப்படி நாங்கள் ராஜினாமா செய்துவிட்டு தலைவரைச் சந்தித்து இதை நேரடியாக அவரிடமே சொல்லுவோம்" என்கிறார்கள் பி.மல்லாபுரம் திமுகவினர்.

ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக