வெள்ளி, 11 மார்ச், 2022

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

மின்னம்பலம் :உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெற்ற மிகப் பெரிய வெற்றியைப் போலவே காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய தோல்வியும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
403 இடங்கள் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில்
காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். உத்தரபிரதேச மாநில தேர்தல் பணிகளை அவரே முழுமையாக கவனித்தார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 209 கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். முதல்வர் யோகி கலந்துகொண்ட கூட்டங்களை விட இது அதிகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதுமட்டுமல்ல பிரியங்கா காந்தி இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை, பெண்களுக்கான பிங்க் தேர்தல் அறிக்கை என்றெல்லாம் வெளியிட்டு பல்வேறு பிரச்சினைகளை தேர்தல் களத்தில் வகைப்படுத்தினார்.

ஆனால் பிரியங்கா காந்தி இவ்வளவு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டும் நேரடியாக தேர்தலில் போட்டியிடாதது மிகப்பெரிய குறையாக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களாலேயே பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடாமல் வாய்ச் சவடால் விடுகிறார் பிரியங்கா என எதிர்க் கட்சிகளும் விமரிசித்தன.

முதல்வர் யோகி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிட்டனர். பிரியங்கா அவர்களைப்போல தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும்.

லக்னோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை முன்னாள் தலைவர் எஸ் கே த்விவேதி கூறும்போது, "பிரியங்கா காந்தி 2022 உத்தரப் பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் காங்கிரஸ் மாநிலத்தில் புதிய வாழ்க்கையை பெற்றிருக்கும்.

யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகியோரை போல வலிமையான காங்கிரஸ் தலைவர் உத்தரப் பிரதேசத்துக்கு இல்லை. இந்த நிலையில் உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தால் மக்கள் மனதில் காங்கிரஸ் பற்றிய நம்பிக்கை வந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் கடைமடை தொண்டர்களுக்கும் நம்பிக்கை வந்திருக்கும்" என்கிறார் அவர்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்னொரு பலவீனமாக பார்க்கப்படுவது பிரியங்கா காந்தியை தேர்தல் பணிகளுக்காக முன்னிறுத்தியும் அவர் தான் முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதுகுறித்த மீடியாக்களின் கேள்விகளுக்குக் கூட பிரியங்கா காந்தி நேரடியாக பதில் சொல்லாமல் பூடகமாகவே பதிலளித்தார்.

"காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் நான்தான் முகம். வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ன?"என்றெல்லாம் கேள்வி கேட்ட பிரியங்கா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸின் தோல்வி இவ்வளவு பெரியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் ரயிலில் ஏறாமல் ரயிலை அப்படி ஓட்ட வேண்டும் இப்படி ஓட்ட வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பதை உத்தரப் பிரதேச மக்கள் ஏற்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள கருத்தில், "ஜனநாயகத்தில் மிக உயர்ந்தது மக்களின் வாக்கு. நம் தொண்டர்களும் தலைவர்களும் மிக கடுமையாக உழைத்தார்கள்.

கட்சியை நல்ல முறையில் கட்டமைத்து போராடினார்கள்.

நம் கடின உழைப்பை நம்மால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை.

உ.பியும் பொது மக்களும் முன்னேற காங்கிரஸ் எப்போதும் பிரச்சனைகளின் அடிப்படையில் ஆன நேர்மறை அரசியலை செய்யும். சிறந்த எதிர்க்கட்சியாக பொறுப்புடன் போராடுவோம்"என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக