செவ்வாய், 29 மார்ச், 2022

துருப்புச் சீட்டு துபாய்: ஸ்டாலினுக்கு எதிராக பாஜக பிளான்!

 மின்னம்பலம் : வைஃபை ஆன் செய்ததும் பெரம்பலூரில் நடந்த பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சிக் கூட்டத்தின் சில படங்கள் முன்வரிசையில் வந்தன.
அவற்றை சேவ் செய்து கொள்ள ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு, தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ்அப்.
"மார்ச் 26 ,27 தேதிகளில் பெரம்பலூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தையும் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்கள். தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் வருகை தந்திருப்பதால் மையக் குழு கூட்டத்தை நடத்தலாம் என முதலில் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வர முடியாததால் மையக் குழு கூட்டத்தை வரும் 30 ஆம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் சந்தோஷ், அண்ணாமலை உள்ளிட்டோர் பேசி இருக்கிறார்கள். 'நீங்கள் சார்ந்த ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களில் ஆளுங்கட்சியான திமுக எந்த தவறு செய்தாலும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு உள்ளே இருப்பதால் உங்களுக்கு தெரியாமல் அவர்களால் தவறு செய்ய முடியாது. எனவே தைரியமாக செயல்பட்டு கண்காணித்து திமுகவினரின் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். பெரிய விவகாரமாக இருந்தால் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்துங்கள். நாம் ஒரு வார்டில் ஜெயித்த அமைப்புகளில் அடுத்த தேர்தலில் பல வார்டுகளை ஜெயிக்கும் அளவுக்கு நமது பணி இருக்க வேண்டும்' என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை மாற்றி அமைக்கும் ஆலோசனையும் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அண்ணாமலை வீட்டில் தங்கியிருந்த சந்தோஷ் நிர்வாகிகள் மாற்றம் பற்றி அண்ணாமலையிடம் விரிவாகப் பேசியுள்ளார்.

ஒவ்வொரு கோட்டப் பொறுப்பாளர்களிடமும் அவர்களுக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு தலைவர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கேட்டுப் பெற்றிருக்கிறார். இந்த மூன்று பேரில் இருந்து ஒருவரை அண்ணாமலை தேர்வு செய்ய இருக்கிறார். கிட்டத்தட்ட தேர்வுப் பணிகள் முடிந்துவிட்டன.வரும் 30 ஆம் தேதி மையக் குழுக் கூட்டத்தில் இதை வைத்து ஒப்புதல் பெற்று மறுநாள் 31 ஆம் தேதி அமாவாசை தினத்தன்று புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதற்கு தயாராகிவிட்டார் அண்ணாமலை.

இந்தக் கட்சி விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் பயணம் பற்றியும் ஆலோசனை நடந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருதுநகரில், '5,000 கோடி ரூபாய் துபாயில் முதலீடு செய்ய போயிருக்கிறார் ஸ்டாலின்' என்று பேசிய பேச்சுக்காக அவர் மீது 100 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நஷ்ட ஈடு கேட்டு திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு நீதிமன்றத்தில் சந்திப்போம் என பதிலளித்து விட்டார் அண்ணாமலை.

இந்த விவகாரம் பற்றியும் சந்தோஷ், அண்ணாமலை உள்ளிட்டோர் விவாதித்திருக்கிறார்கள்

'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாம் சொன்ன கருத்தை தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்கு பதில் அறிக்கை கொடுத்தவர்கள் பாஜகவுக்கு மட்டும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

இதிலிருந்தே பாஜக மீது திமுக பதற்றத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல இந்த விவகாரத்தில் திமுக பேசிக் கொண்டிருக்கிறது. பாஜக எழுப்பிய இந்த விவகாரம் மக்கள் மத்தியில் மிக ஆழமாக சென்று இருக்கிறது. இந்தப் பிரச்சினையை நாம் தொடர்ந்து எழுப்பலாம்' என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

மேலும், 'ஸ்டாலின் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் தான். அவரது வெளிநாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்து அவர் மீண்டும் சென்னை திரும்பும் வரை அவரது பயணத்தை பற்றிய அனைத்து விஷயங்களும் மத்திய அரசுக்கு துல்லியமாக கிடைத்து வருகின்றது.

ஒவ்வொரு நாட்டின் தூதரகத்திலும் நமது நாட்டுடைய புலனாய்வு அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ராணுவப் புலனாய்வு துறை உள்ளிட்ட அதிகாரிகள் வெவ்வேறு பணி நிலைகளில் டெபுடேஷனில் இருப்பார்கள். தமிழக முதல்வரின், வெளிநாட்டில் ஒவ்வொரு நகர்வும் இவர்களுக்கு தெரியாமல் நடக்காது.

துபாயில் அரசு நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள், கட்சி நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் இனிமேல்தான் தகவல்கள் தெரியவரும். முன்கூட்டியே சென்ற ஸ்டாலின் குடும்பத்தினர் சபரீசன், உதயநிதி ஆகியோர் யாரை சந்தித்தார்கள் என்ற விவரங்களும் துபாயில் இருக்கும் புலனாய்வு அதிகாரிகள் மூலமாக கிடைத்துவிடும்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் போல துபாயில் இருக்கும் கலிஃபா டவரில் லேசர் ஷோ நிகழ்ச்சி நடத்துவதற்கு மட்டும் குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது என்று முதல்கட்ட தகவல் வந்துள்ளது. இதுபோல ஒவ்வொரு தகவலும் நமக்கு கிடைக்கும்.

இதெல்லாம் திமுகவுக்கும் நன்கு தெரியும். அவர்கள் இந்த வழக்கை நீதிமன்றத்தில் நடத்த விரும்பினால் வழக்கு விசாரணை மூலமாக பாஜக பல கேள்விகளை எழுப்ப முடியும். அண்ணாமலை இந்த விஷயத்தை எழுப்புவதற்கு முன்பே பத்திரிக்கைகள் எழுப்பி இருக்கின்றன.

எனவே வழக்கு நடந்தால் அதை சந்திப்போம். அதற்கு முன்னர் ஸ்டாலின் துபாய் பயணத்தின் ஆடம்பரங்களை வீண் செலவுகளையும் நாம் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதற்கு இந்த துபாய் பயண விவகாரத்தை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்துவோம் ' என்று சந்தோஷ், கேசவ விநாயகம், அண்ணாமலை ஆகியோர் விவாதித்திருக்கிறார்கள்.

ஆர் எஸ் பாரதி 24 மணி நேரத்தில மன்னிப்பு கேட்கவில்லை. என்றால் வழக்கு தொடுப்போம் என கூறியிருந்தார். அண்ணாமலை உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்ட பிறகும் திமுக அடுத்த கட்ட நடவடிக்கையை இன்னும் தொடங்கவில்லை.

இந்த நிலையில் ஸ்டாலின் குடும்பத்தோடு துபாய் சென்ற விவகாரத்தை வைத்து மக்கள் மன்றத்திலும் தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் பாஜக சீரியஸாக இறங்கப் போகிறது என்பதுதான் பாஜகவில் இருந்து கிடைக்கும் தகவல்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக