செவ்வாய், 29 மார்ச், 2022

கண்ணப்பன் துறை மாற்றப் பின்னணி! தொடர் சர்ச்சைகள்

தொடர் சர்ச்சைகள்: கண்ணப்பன் துறை மாற்றப் பின்னணி!

மின்னம்பலம் : தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த எஸ். எஸ். சிவசங்கர் இன்று முதல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப் படுகிறார். இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மாளிகை இன்று மார்ச் 29ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த கடந்த 10 மாதங்களில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான அமைச்சர் என்று பெயரெடுத்தவர் ராஜ கண்ணப்பன் தான்.
கடந்த 2021 ஆம் வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஸ்வீட் கொள்முதல் செய்வதில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதன்முதலில் மின்னம்பலம் 2021 அக்டோபர் 18ஆம் தேதி செய்தி வெளியிட்டது.



இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசுக்கு எதிராக பயன்படுத்தினர்.

அதையடுத்து இனி எந்த துறைக்கு இனிப்பு வாங்குவதாக இருந்தாலும், அரசின் துறை கூட்டங்களுக்கு இனிப்பு வாங்குவதாக இருந்தாலும் கூட, அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் இருந்தே வாங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சர்ச்சைகள் அடங்கிய நிலையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி கண்ணப்பனின் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட போக்குவரத்து துறை துணை ஆணையர் (1) நடராஜனின் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி கட்டுக்கட்டாக பணத்தைக் கைப்பற்றினார்கள்.

துணை ஆணையர் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து துறையில் பணி இடமாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றுக்காக லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் வாங்கி அதை எண்ணுவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு பணம் என்னும் மெஷன்களும் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பணமெல்லாம் போக்குவரத்து துறை அமைச்சருக்கு தான் செல்கிறது என லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்தும் மின்னம்பலத்தில் தொடர் புலனாய்வுக் கட்டுரைகள் வெளியிட்டோம். துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான் மூன்றாவது முக்கிய சர்ச்சையாக முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தன்னை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயர் சொல்லி அவமதித்தார் என்று நேற்று 28 ஆம் தேதி செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதுவரை கண்ணப்பன் மீது சொல்லப்பட்ட புகார்கள் பண ரீதியான புகார்களாக இருந்தன. இந்த முறை சமூக ரீதியாக பதற்றம் ஏற்படுத்தும் சர்ச்சை அமைச்சர் கண்ணப்பன் மீது ஓர் அரசு அதிகாரியாலேயே பகிரங்கமாக சுமத்தப்பட்டது. அந்த அதிகாரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சமூக அமைப்பினர் போராட்டத்தில் இறங்க தயாரானார்கள்.

சமூகநீதி பற்றி பேசும் உங்கள் ஆட்சியில் ஒரு அமைச்சரின் சமூகநீதி இதுதானா என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனும், அதிமுகவும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி

கேள்விகள் எழுப்பினர்.

இந்த நிலையில்தான் இன்று மாலை திடீரென ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிவிப்பில், " போக்குவரத்து துறையில் இருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ். எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் சர்ச்சைகளுக்கு உட்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக