செவ்வாய், 22 மார்ச், 2022

நீ இல்லா உலகில் நான் வாழ மாட்டேன் எனத் தெரியாதா மீனா” – அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி

vikatan  : விருதுநகரில் காதல் ஜோடி அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உருக்கமான கடிதம் சிக்கியது. அதைக்கொண்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூர், கோட்டைநத்தத்தைச் சேர்ந்தவர் சோலைமீனா (21). விருதுநகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவந்தார்.


அதே பகுதியில் இருக்கும் எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்த சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (22). இவரும் சோலைமீனாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரவீன்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணும் காதலித்துவந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், எதிர்ப்பையும் மீறி இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சமயத்தில் பிரவீன்குமார் வேலை காரணமாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்த சமயத்தில் பிரவீன்குமாரின் காதல் விவகாரம் முன்னாள் காதலியின் வீட்டில் பூதாகரமாக வெடிக்க, அவருடைய காதலி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஊருக்கு திரும்பி வந்த பிரவீன்குமார் தன் காதலி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலறிந்து மனவிரக்தியில் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த பிரவீன்குமாரை அவரின் உறவினர்கள் மீட்டு விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்குதான் பிரவீன்குமாரும் சோலைமீனாவும் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர்.

பிரவீன்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் வீடு திரும்பிச் செல்லும் வரை அவருடைய மருத்துவமுறைகளை சோலைமீனாவே நர்ஸாக இருந்து கவனித்து வந்திருக்கிறார்.

இடைப்பட்ட நாள்களில் பிரவீன்குமாருக்கும், அவருடைய முன்னாள் காதலிக்குமான காதல் கதையைக் கேட்டு அதில் மனம் கசிந்துருகி பிரவீன்குமார் மீது காதல் வயப்பட்டுள்ளார் சோலை மீனா.

சிறிது நாள்களிலேயே இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். தொடர்ந்து சோலை மீனாவைத் தேடி அவர் வேலை பார்த்துவந்த மருத்துவமனைக்கே சென்று அடிக்கடி தனியே சந்தித்துப் பேசிவந்துள்ளார் பிரவீன்குமார்.

இருவரும் மருத்துவமனை வளாகத்தில் நின்று பேசுவதும், காதலை பரிமாறிக்கொள்வதுமாக இருந்த காட்சிகளை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து கண்டித்துள்ளனர். இதனால் சோலை மீனாவுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை நேற்று முன்தினம் அவர்களுக்குள் முற்றியதாகத் தெரிகிறது. அன்றைய தினம் இரவு பணியிலிருந்த சோலைமீனாவை ‘பணிபுரியும் இடத்தில் இது போன்று காதலுக்கு இடமளிக்கக் கூடாது’ என சக ஊழியர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தமடைந்த அவர் இரவு முழுவதும் அழுதுகொண்டே தனது பணியைச் செய்திருக்கிறார்.

தொடர்ந்து, நேற்று காலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சோலைமீனா, `எனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என எழுதிவைத்துவிட்டு பட்டம்புதூரில் காலை 10 மணி அளவில் அந்த வழியே வந்த திருவனந்தபுரம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

காதலி சோலைமீனா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்ததுமே மனமுடைந்த பிரவீன்குமார் தனது டூ வீலரை எடுத்துக்கொண்டு விருதுநகர் பி.ஆர்.சி குடோனுக்குப் பின்புறம் கே.உசிலம்பட்டி பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் அந்த வழியே வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என போலீஸார் தெரிவித்தனர்.
பிரவீன்குமார்


இந்தச் சம்பவம் குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்துகையில், பிரவீன்குமாரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பிரவீன்குமார்,

`நீ இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் என்று உனக்குத் தெரியாதா மீனா? அப்படியிருக்கையில் என்னைவிட்டு நீ மட்டும் ஏன் ரயில் முன் பாய்ந்து இறந்துபோனாய்! இதோ, நானும் உன்னோடு வருகிறேன்.

இங்கு ஒன்றாக சேர முடியாத நாம் செத்த பிறகாவது, ஒன்றாச்க சேர்ந்து வாழ்வோம்’ என ஒரு பேப்பரில் எழுதி, அதன் கீழே `எங்களின் சாவுக்குக் காரணம் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான்’ என மூன்று நபர்களின் பெயரையும் குறிப்பிட்டு அதைப் புகைப்படமாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதைக் கைப்பற்றி ரயில்வே போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

விருதுநகரில் காதல் இளம் ஜோடிகள் அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக